ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா இன்று எம்.எல்.ஏ.ஆக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆர்.கே.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டார்.
கடந்த ஜூன் 27ம் தேதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. 30ம் தேதி ஓட்டு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் முதல்வர் ஜெயலலிதா ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அன்றே அவர் எம்.எல்.ஏ.ஆக பதவி ஏற்பார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென பதவியேற்பு தள்ளிப்போனது. இந்த நிலையில் எம்.எல்.ஏ.ஆக முதல்வர் ஜெயலலிதா இன்று பதவி ஏற்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக காலை 11 மணிக்கு அவர் தலைமைச் செயலகத்திலுள்ள சபாநாயகர் அறைக்கு வந்தார். சபாநாயகர் தனபால் முன்னிலையில் ஜெயலலிதா பதவி பிரமாணம் படித்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார். ஐந்தாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதா, தற்போது 6வது முறையாக சட்டசபை உறுப்பினராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment