கருணாநிதியின் வைரவிழா வயதானோருக்கான விழா என்று சொல்லி மூத்த குடிமக்களை பொன்.ராதாகிருஷ்ணன் கொச்சைப்படுத்தியுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், தான் 16 வயது இளைஞன் அல்ல, 61 வயது இளைஞன் என்று கூறியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா மற்றும் சட்டசபை வைரவிழா சனிக்கிழமை ஒய்எம்சி மைதானத்தில் நடந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் வைரவிழா வயதானவர்களுக்கான விழா என்று சாடினார். இந்த கருத்துக்கு பதிலளித்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வைரவிழா வயதானவர்களுக்கான விழா என்று கூறியது பொன்னாரின் அரசியல் நாகரிகத்தை எடுத்துக் காட்டுவதாக தெரிவித்தார். வைரவிழா வயதானவர்களுக்கான விழா என்று சொன்ன பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 16 வயது என்றும் கிண்டல் செய்தார். இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன் வயதானவர்கள் என்ற தமது கருத்து புறந்தள்ளப்பட்ட கட்சிகள் என்ற பொருளிலானது என்று தெரிவித்தார். தமிழக அரசை மத்திய அரசு ஆட்டுவிக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், அதனை தமிழக முதல்வர் தான் சொல்லவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment