திருச்சி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
செய்துகொண்ட வழக்கு தொடர்பாக சங்கீத என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி அருகே உள்ள திருவானைக்காவல் சிங்கபெருமாள் கோவில் தெரு பகுதியைச்
சேர்ந்தவர் விஸ்வநாதன் (35). அ.தி.மு.க. பிரமுகரான இவர் அப்பகுதியில்
செருப்பு கடை நடத்தி வந்தார். இவரது மனைவி தெய்வானை (34). இவர்களுக்கு
குணசேகரன் (14) என்ற மகனும் 1½ வயதில் நிஷாந்தினி என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் தூக்குப்போட்ட நிலையில் விஸ்வநாதன் அவரது வீட்டில்
பிணமாக தொங்கினார். இதைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்
இதுகுறித்து உடனடியாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உதவி போலீஸ் கமிஷனர் ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ
இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று
பார்த்தனர்.
அப்போது விஸ்வநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையிலும், தெய்வானை,
குணசேகரன், குழந்தை நிஷாந்தினி ஆகியோர் படுக்கையிலும் விஷம் குடித்த
நிலையிலும் பிணமாக கிடந்தனர். பின்னர் 4 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார்
பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் 4 பேர் தற்கொலை செய்து உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தி வந்த
நிலையில், இது தொடர்பாக சங்கீதா என்ற பெண்ணை ஸ்ரீரங்கம் போலீசார் கைது
செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னரே
இவர்கள் 4 பேரும் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது வேறு எதாவது காரணமா
என்பது குறித்து தெரியவரும். .
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், விஸ்வநாதன் கடன் தொல்லையால் மனைவி,
மகன், மகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு,
தற்கொலை செய்ததாக கூறப்பட்டது.
No comments:
Post a Comment