Latest News

மாணவர்களின் கல்விப் பயணம் எதை நோக்கி பயணிக்க வேண்டும்?


கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது ‘மூன்றாம் ஆண்டு படிப்பை நிறைவு செய்த பின் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்? என்று மாணவர்களிடம் கேட்டேன். வகுப்பில் அமர்ந்திருந்த பெரும்பான்மையான மாணவர்களின் பதில் இதுதான் “முதலில் அரியர் பாஸ் பன்னணும் சார்!” அதற்கு பின் என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்’ என்று கூறினர்.

சரி! நீங்கள் அரியர் தேர்வில் பாஸ் ஆகி விட்டீர்கள் அடுத்து என்ன செய்வீர்கள் என்ற என்னுடைய எதார்த்தமான கேள்விக்கு “ஆஹா! இவரிடம் இப்படி மாட்டிக் கொண்டோமே” என்ற அர்த்தம் பொதிந்த பார்வையே அதற்கான விடையாக தெரிந்தது.

மாலை வீடு திரும்பிய உடன் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து உங்கள் மகனை எதற்காக கல்லூரியில் சேர்த்தீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அந்த பொறுப்புள்ள தந்தை இப்படி கூறினார் “+2 முடித்த பின் வீட்ல சும்ம இருந்தா நல்லா இருக்காது; ஏதாவது ஒரு டிகிரி வாங்கனும்; அதான் பக்கத்துல இருக்கிற நம்ம காலேஜ்ல சேர்த்து விட்டேன் என்று கூறினார்.

மேற்காணும் உரையாடல் ஏதோ ஒரு சில மாணவர்களும், அவர்களைச் சார்ந்த பெற்றோர்களின் எண்ணமும், சிந்தனையும் மட்டும்தான் என்று நினைக்க வேண்டாம். ஏறக்குறைய பள்ளி, கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் பெரும்பாலான மாணவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த பெற்றோர்களின் மன ஓட்டமும் இதுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எதற்காக நமது குழந்தைகளை படிக்க கல்வி கற்க வைக்கிறோம் என்பது தெரியாமல் எதற்காக எந்த நோக்கத்திற்காக நாம் கல்வி கற்க பள்ளி கல்லூரிகளுக்கு செல்கிறோம் என்பது தெரியாமலும் புரியாமலும் படிப்பை நிறைவு செய்து வெளியேறுகின்ற இந்த மாணவர்களை (?!) வைத்து நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் என்ன பயன் இருக்கப் போகிறது என்ற ஐயமும் சிந்தனையும் கல்வியாளர்களுக்கும் சமூக சிந்தனையாளர்களுக்கும் எழுகிறது.

இலட்சியமில்லாத, இலக்கை நோக்கி பயணிக்காத எதுவும் நிலைத்ததில்லை என்பதும் அதன் மூலம் பெரும் பயனையும் பலனையும் எதிர்பார்க்க முடியாது என்பதும் வரலாறு கூறும் உண்மை. நாட்டின் வளர்ச்சியும் சமூகத்தின் வளர்ச்சியும் வளர்கின்ற மாணவக் கண்மனிகளாக இருக்கின்ற இளைய சமூகத்தின் கைகளில் இருக்கின்ற சூழலில் மாணவர்களின் கல்விப் பயணம் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற புரிதலுக்கான கட்டுரையாக இது அமையும்.

இலக்கை தீர்மானியுங்கள் 

நாம் எதற்காக படிக்க வேண்டும்? படித்து முடித்த பின் என்னவாக உருவாக வேண்டும்? சமூகமும் நாடும் நம்மிடம் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறது? என்ற இலக்கில்லாத பயணமும், குறுகிய சிந்தனையும் மாணவர்களின் வாழ்வையும், அவனைச் சூழ இருப்பவர்களின் வாழ்வையும் கேள்விக் குறியாக்கி விடுகிறது. எனவே கல்வி கற்கும் மாணவர்கள் கல்வி கற்பதற்கான குறிக்கோளை நோக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

குறிக்கோள் - 1 

நான் கல்வி கற்பதன் மூலம் எனது தேசம், எனது சமூகம், எனது குடும்பம் பயன்பெற வேண்டும். மேற்சொன்ன முதல் நோக்கத்தை மனதில் நிலைநிறுத்துகின்ற மாணவர்களுக்கு யதார்த்தமாக ஒரு கேள்வி எழும்?
எனது நாடு? எனது சமூகம்? என் மூலம் என்ன பலனை கண்டு விடப்போகிறது? என்பதுதான். நமது இந்திய நாட்டின், இஸ்லாமிய சமூகத்தின் உயர்வுக்கு ஏன் நாம் காரணமாக இருக்க வேண்டும் தெரியுமா?
‘இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு’ என்ற சிந்தனை ஒவ்வொரு இஸ்லாமியர்களுக்குள்ளும் இரண்டரக் கலந்த ஒன்று.

1612 ஆம் ஆண்டு வணிக நோக்கத்திற்காக நமது தேசத்திற்குள் நுழைந்த வெள்ளையர்கள் அரசியலில் பிளவை ஏற்படுத்தி நமக்குள் இயல்பாக இருந்த ஒற்றுமையை சீர் குழைத்து நம்மை அடிமைகளாக மாற்றினார்கள்.

இந்திய நாடு எங்கள் தாய்நாடு நாங்கள் யாருக்கும் அடிமைகளாக மாட்டோம்; வெள்ளையனே எங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறு என்று உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளை உதிர்த்ததோடு நின்றுவிடாமல் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக விடுதலைப் போரில் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த மாவீரன் திப்பு சுல்தான், ஹைதர் அலி, மௌலானா முஹம்மது அலி, சௌகத் அலி, பகதூர்ஷா, மௌலானா அபுல்கலாம் ஆஸாத், காந்தி போன்ற வீர தியாகிகளின் உயிர், உடமை போன்ற அர்ப்பணிப்புகளால்தான் இன்று நாம் சுதந்திரமாக(?!) வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நமது தேசத்தை காப்பதற்காக உயிரையே துறந்து நம் முன்னோர்கள் பாதுகாத்த இந்த மண் எனது கல்வி மூலம் உயர் அந்தஸ்தை பெறுவதற்கு நான் ஏன் காரணமாக இருக்கக் கூடாது? என்று உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்.

1947 ஆ ம் நமது நாடு சுதந்திரம் அடைந்த பின் ஜவர்ஹர்லால் நேரு அவர்கள் முதல் பிரதமராகிறார். அவருக்கு மிகவும் உறுதுணையாக உற்ற நண்பராக இருந்த மௌலானா அபுல்கலாம் ஆஸாத் அவர்கள் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பு ஏற்றார்.

மத, ஜாதி, இன பாகுபாடின்றி, அனைவருக்குமான ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை இந்திய நாட்டின் உயர்விக்கான கல்விக் கொள்கை இப்படித்தான் இருக்க வேண்டுமென தீர்மானித்து அது நடைமுறைப்படத்தப்பட்டது. அதன் வழிகளில் கல்வி கற்கின்ற நாம் மௌலானா அபுல்கலாம் ஆஸாத் அவர்கள் போல் வாழ வேண்டும் மாற வேண்டும் என்று ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும்?
எனது இந்திய நாட்டின் வீர வரலாறுகளில் புதைந்து கிடக்கின்ற லட்சக்கணக்கான உயிர்களின் தியாகங்களை, சுகமாக அனுபவிக்கின்ற நாம் அவர்களைப் போல் நாமும் நமது தேச உயர்விற்கு காரணமாக வேண்டும் எனில் கல்வியும் படிப்பும் மிக அவசியம் என்பதை உணருங்கள். 

எனவே எனது தேசம் உலக அரங்கில் உயர்வதற்கு எனது பங்களிப்பு ஏதேனும் ஒரு வகையில் அமைந்திட வேண்டும் என்ற லட்சியத்தில் உங்களது படிப்பை துவங்குங்கள்.

அதுபோல எனது நாட்டின் தலைகுனிவிற்கு பெரிதும் காரணமாக இருக்கின்ற தீய குணங்களுக்கும், தீய சக்திகளுக்கும் உடன்பட மாட்டேன் என்ற லட்சியத்தையும் மனதில் நிலை நிறுத்துங்கள்.

மேலும் எனது சமூகம் கல்வி உயர்வில் மேம்பட வேண்டும் என்பதற்காக தங்களது செல்வத்தை கொட்டிக் கொடுத்தவர்கள் ஏராமானோர். இன்று மாணவர்களாகிய உங்களுக்கும் ஆசிரியர்களாகிய எங்களுக்கும் கல்வியை வழங்கிய கல்லூரிகளின் பின்னணியில் ஏராளமான தியாக வரலாறுகள் மறைந்து புதைந்து கிடக்கின்றன.

ஒருவேளை அவர்களுக்கு தியாக மனப்பான்மை மட்டும் இல்லாது போயிருந்தால் இன்று நமது நிலையும் நிலைப்பாடும் கேள்விக் குறியாகி இருக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

நமது சமூக உயர்விற்காக தியாகம் செய்த அந்த கொடை வள்ளல்களின் பள்ளிகளில், கல்லூரிகளில் படித்து முடித்து விட்டு வெளியேறுகின்ற நம்மில் எத்தனை பேருக்கு சமூக மேம்பாடு குறித்த அக்கறை உள்ளது?
எனவே எனது சமூகத்திற்கான உயர்வில் எனது கல்வி ஒரு காரணமாகவும், காரணியாகவும் அமைய வேண்டும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
சமூக சிந்தனையோடு உங்களை வளர்த்து வருகின்ற உங்களது தாயும் தந்தையும் போற்றுதலுக்குரியவர்கள்.

இன்றைய காலத்தில் ஏறக்குறைய 20,000 முதல் 40,000 வரை சம்பாதிப்பதற்கு எவ்வளவு கஷ்டங்கள் உள்ளது என்பதை சம்பாதிப்பவர்களால் மட்டுமே அதன் வலியை, ரணத்தை உணர முடியும். இந்த வலி தான் அந்த பணம் வீணடிக்கப்படும் போது உபதேசமாகவோ, அறிவுறையாகவோ கண்டிப்பாகவோ உங்களது பெற்றோர்களிடம் இருந்து வெளிப்படுகிறது.

என் மகன் ஏதேனும் வேண்டும் என்று கேட்டால் தங்கள் கஷ்டத்தை உள்ளடக்கி கடன் வாங்கியாவது உங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறார்கள். 

நீங்கள் கேட்டவுடன் உங்கள் பெற்றோர்களால் கொடுக்கப்படுகின்ற ஒவ்வொரு பைசாவிற்கு பின்பு தியாகங்களும் கஷ்டங்களும் அவமானங்களும் ஒளிந்திருக்கின்றன என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டால் உண்மையில் நீங்கள் புனிதர்கள் தான்.

எனது மகனுக்கு / மகளுக்கு எந்த சூழலிலும் எங்களது கஷ்டம் தெரிந்து விடக்கூடாது என்ற பெருந்தன்மையான உங்களது பெற்றோர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
எனதருமை மாணவக் கண்மணிகளே! உங்கள் பெற்றோர்களை நீங்கள் உயர்த்த வேண்டும் என்பது உங்களுக்கு இரண்டாம் பட்சம்; மற்றவர்களுக்கு முன் உங்களது பெற்றோர்களை தயவு செய்து தலை குனிய வைத்து விடாதீர்கள் என்பதை முதல் தரமாக வைத்து உங்களது படிப்பை துவக்குங்கள்.
எனவே ஒவ்வொரு மாணவரும் எனது படிப்பின் மூலம் எனது நாடும் சமூகமும் குடும்பமும் பயன்பெற வேண்டும், உயர வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையை படிப்பின் முதல் நோக்கமாக கொண்டு பள்ளி / கல்லூரிக்குள் நுழையுங்கள் அனைத்தும் உங்களை வரவேற்கும்.

மாணவர்களின் முதல் நோக்கம் முழுமையாக வெற்றியடைய நானும் ஒரு மாணவனாக வாழ்த்துகிறேன்.
ஃபக்கீர் இஸ்மாயில் பிலாலி

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.