தமிழக நலன்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன் என நடிகர் சத்யராஜ்
தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் நான் கர்நாடக மக்களுக்கு எதிரானவன் இல்லை
என்றும் அவர் கூறியுள்ளார்.
பாகுபலி படத்தில் நடிகர் சத்யராஜ் கட்டப்பா கதாப்பாத்திரத்தில்
நடித்துள்ளார். இந்த கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை
பெற்றுள்ளது.
படத்தின் நாயகனான பாகுபலியை கொலை செய்வதுதான் கட்டப்பா கதாப்பாத்திரம்.
இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில்
உருவாக்கப்பட்டுள்ளது.
போராட்டங்களில் சத்யராஜ்
இந்நிலையில் காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் நடைபெறும்
போராட்டங்களில் பங்கேற்கும் நடிகர் சத்யராஜ் கர்நாடகத்துக்கு எதிராக
பேசியிருந்தார். அண்மையில் கர்நாடகாவுக்கு எதிராக நடைபெற்ற
உண்ணாவிரதத்திலும் சத்யராஜ் கலந்து கொண்டார்.
28ஆம் தேதி போராட்டம்
இதனால் சத்யராஜ் நடித்த பாகுபலி - 2 படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய
வெட்டுவால் நாகராஜ் தலைமையிலான குழு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
சத்யராஜ்க்கு எதிராக வரும் 28ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்யராஜ் வருத்தம்
படத்தின் இயக்குநரான ராஜமவுளி பாகுபலி படத்தை வெளியிட அனுமதிக்குமாறு
கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் படத்தை வெளியிட
அனுமதிக் கோரியும், கன்னடர்கள் குறித்த தனது பேச்சுக்காக வருத்தம்
தெரிவித்தும் சத்யராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளளார்.
கன்னடர்களுக்கு எதிரானவன் அல்ல
அதில் நான் கர்நாடக மக்களுக்கு எதிரானவன் அல்ல என நடிகர் சத்யராஜ் விளக்கம்
அளித்துள்ளார். பாகுபலி - 2 படத்தை வெளியிட கன்னட மக்கள் ஒத்துழைக்க
வேண்டும் என்றும் சத்யராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
படக்குழு பாதிப்பு
கன்னடர்கள் குறித்த தனது பேச்சு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் சத்யராஜ் தனது விளக்க
அறிக்கையில் கூறியுள்ளார். தான் ஒருவனால் ஒட்டு மொத்த படக்குழுவும்
பாதிக்கப்படுவதை தான் விரும்பவில்லை என்றும் சத்யராஜ் கூறியுள்ளார்.
தொடர்ந்து குரல் கொடுப்பேன்
மேலும் தமிழக நலன்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் சத்யராஜ்
தனது அறிக்கையில் தெளிவு படுத்தியுள்ளார். நடிகனாக இருப்பதை விட தமிழனாக
இருப்பதில் பெருமை கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்
No comments:
Post a Comment