கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஏற்பட்ட திடீர் அரசியல் நிகழ்வுகளில்
கவனிக்கப்பட வேண்டிய ஒன்று கூட்டுத் தலைமை என்ற தத்துவத்தை நோக்கி கட்சி
நகர்வதுதான். அண்ணா திமுகவின் முக்கிய நபர்களில் ஒருவரான வைகைச் செல்வன்
"இனி அதிமுக கூட்டுத் தலைமையின் கீழ் இயங்கும். ஒரு நபர் தலைமை நிலை
மாறும்" என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார்.
அண்ணா திமுகவின் முகங்களாக முப்பது ஆண்டுகளுக்கு முன் எம்ஜிஆர் என்ற தனி
நபரும் அதன் பின் ஜெயலலிதா என்ற தனி நபரும் இருந்தனர். திமுகவில் கூட
அண்ணாவுக்குப் பின்னர் கருணாநிதி, அவரது குடும்பத்தினரே கட்சியின்
முகங்களாக இருந்து வருகின்றனர். இது திராவிட கட்சிகளின் கலாசாரம்
மட்டுமல்ல. நாடு முழுவதுமே உள்ள பிரபுத்துவ நிலையின் நீட்சியாகவே
அமைந்துள்ளது.
தேசிய அளவில் நேருவுக்குப் பின் இந்திரா காந்தி, இந்திரா காந்திக்குப்
பின் சஞ்சய் காந்தி அவரது மறைவினால் ராஜீவ் காந்தி, அவருக்குப் பின்னர்
சோனியா அல்லது ராகுல் காந்தி, பிரியங்கா என்று வாரிசுக்கு வித்திடுகிற
அரசியல் போக்கு வழக்கமாகிவிட்டது. சரத்பவாரின் மகள், சந்திரபாபு நாயுடுவின்
மகன், முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ், பிஜு பட்நாயக்கின் மகன் நவீன்
பட்நாயக், சரண்சிங்கின் மகன் அஜீத் சிங், தேவிலால் மகன் ஓம்பிரகாஷ்
சௌதாலா, பி.ஏ. சங்மாவின் மகள்.. இப்படி அரசியலில் வாரிசுகள் உருவாகி,
தனிநபர் வழிபாட்டை நிலைபெறச் செய்துவிடுகிறது. அதன் விரிவாக குடும்ப
அரசியலும் நிரந்தரமாகிவிடுகிறது.
இதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று அரசியல் மிகப் பெரிய லாபகரமான
தொழிலாகிவிடுவதால், கட்சிகள் கம்பெனிகள் ஆகிவிடுகின்றன. மக்களிடையே
பல்லாயிரம் ஆண்டுகளாக மன்னராட்சிக்கு அடிபணிவது என்ற உணர்வு ரத்தத்திலேயே
ஊறிவிட்டதும்தான்.
அதே சமயம், கம்யூனிஸ்ட் கட்சிகள் இத்தகைய தனி நபர் வழிபாட்டை
ஊக்குவிப்பதேயில்லை. கியூபாவில் வேண்டுமானால், ஃபிடல் காஸ்ட்ரோவின் சகோதரர்
அதன் அதிபராக இருந்திருக்கலாம். மற்றபடி பொதுவுடமைக் கட்சியினர் அதை
ஊக்குவிப்பதேயில்லை. ரஷியப் புரட்சியின் விளைவாக கம்யூனிஸ்ட் இயக்கம்
தோன்றியபோது, லெனின, ஸினோவேவ், காமெனேவ், ட்ராட்ஸ்கி, ஸ்டாலின்,
சுகோலநிகோவ், புப்னோவ் ஆகியோர் கொண்ட போலிட் பீரோ உருவாக்கப்பட்டது, உலக
அரசியல் வரலாற்றின் முதல் அரசியல் மேலிடக் குழு ஆகும்.
கம்யூனிஸ்டுகள் அல்லாத தலைவர்கள் கூட மொரார்ஜி தேசாய், வி.பி. சிங்,
சந்திரசேகர், வாஜ்பாய் (மணமாகாதவர் என்றாலும்) வாரிசு அரசியலையோ குடும்ப
அரசியலையோ ஏற்படுத்தவில்லை. இத்தகைய சூழ்நிலையில் அண்ணா திமுகவில் ஏற்பட்ட
பிணக்கு முடிந்து, சசிகலா, தினகரனின் ஆதரவாளராக இருந்த முதலமைச்சர்
எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்களும் சட்டப் பேரவை
உறுப்பினர்களும், சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தை எதிர்த்துப்
போர்க்கொடி உயர்த்தி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான
அணியினரும் இணைவது குறித்து தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் இணைவதற்கு அடிப்படைக் காரணங்கள் சசிகலா, தினகரன்
குடும்பத்தினரைக் கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் ஒதுக்குவது என்ற
அடிப்படைதான். இவ்வாறு செய்தால், மக்கள் ஆதரவைப் பெற்ற இரட்டை இலைச்
சின்னத்தையும் மீட்டு ஆட்சியைத் தொடரச் செய்யலாம் என்ற நோக்கம் இன்னொரு
காரணம். இதைப் போன்ற நிகழ்வு 1989ம் ஆண்டு நடைபெற்றாலும், அப்போதைய
நிகழ்வுக்கும் இப்போதைய நகர்வுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு.
காரணம், ஜெயலலிதா, ஜானகி அணிகள் இணைந்தாலும், அரசியலிலும், மக்கள்
மத்தியிலும் அறிமுகம் ஆகிய செல்வாக்கு பெற்றிருந்ததால் ஜெயலலிதாவின் தலைமை
அக்கட்சியின் ஒற்றைத் தலைமையை வலுப்படுத்தியது. பெரியாருடன் கருத்து
வேறுபாடு கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய அண்ணா தான்
செல்வாக்கு மிக்க மக்களை ஈர்க்கும் ஆற்றல் படைத்தவராக இருந்தாலும் இரு
அரசியல் உயர்ந்த பண்புகளைக் கடைப்பிடித்தார். ஒன்று, தனது குடும்பத்தினர்
கட்சியிலோ ஆட்சியிலோ தலையிடாமல் பார்த்துக் கொண்டார். அடுத்து, தான் ஒருவனே
தலைவன் என்ற நிலைக்கு மாறாக கூட்டுத் தலைமையை உருவாக்கினார்.
நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன், என்.வி.என்., சி.பி. சிற்றரசு போன்றோரைக்
கொண்ட ஐவர் குழுவே கட்சியை வழிநடத்தும் என்று பிரகடனம் செய்தார். இத்தகைய
அணுகுமுறை பொதுவுடைமைக் கட்சிகள் கடைப்பிடிக்கும் பொலிட் பீரோ (அரசியல்
மேலிடக் குழு) அமைப்புக்கு இணையாகப் போற்றப்பட்டது. திராவிட முன்னேற்றக்
கழகம் அண்ணாவின் மறைவுக்குப் பிறகும் சக்தியாக விளங்குவதற்கு இந்த
அஸ்திவாரமே காரணம் எனலாம்.
தமிழகத்தில் குடும்ப அரசியலை முதலில் புகுத்தியவர் மு. கருணாநிதிதான்.
1967ம் ஆண்டு முதலமைச்சர் பொறுப்பை ஏற்பதற்காக தென்சென்னை மக்களவைத்
தொகுதியிலிருந்து அண்ணா விலகியதால் ஏற்பட்ட காலியிடத்தில் போட்டியிட
கருணாநிதி தனது மருமகன் முரசொலி மாறனை நிறுத்தச் செய்தார். மாறன் பெயரை
அவரே முன்மொழியாமல், கூட்டணியின் சகாவாக இருந்த ராஜாஜி மூலம் அறிவித்து,
அதற்கு ஓர் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தார். அப்போது கருணாநிதி தொடங்கிய
குடும்ப அரசியல் மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன்
என்று விரிவடைந்துவிட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரைப் பொருத்தவரையில்
நேரடி வாரிசு இல்லைதான். எம்ஜிஆர் தான் வாழ்ந்த வரையில் தனது
குடும்பத்தினரை அரசியலிலோ ஆட்சியிலோ திணிக்கவில்லை என்பதை மறுக்க முடியாது.
அகே சமயம் அவருக்கு விருப்பமானவர்களைக் கட்சியில் திணித்து அதிகாரத்தை
அள்ளி வழங்கியது தவறுகளுக்கு வழி வகுத்துவிட்டது. அதன் உச்சக் கட்டமே
ஜெயலலிதாவை அவர் அரசியலில் அறிமுகம் செய்தது.
இருந்தாலும், ஜெயலலிதா குறுகிய காலத்தில் அரசியலைக் கற்றுக்
கொண்டதுடன், அண்ணா திமுகவின் வெற்றிக்காகப் பாடுபட்டார் என்பதை யாராலும்
மறுக்க முடியாது. அதைப் போல் திமுகவில் முரசொலி மாறனும், மு.க. ஸ்டாலினும்
அரசியலை கற்று, பல பணிகளை ஆற்றினர் என்பதையும் ஒதுக்கிவிட முடியாது.
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரையில் சசிகலாவுக்குக் கட்சியில் பெரிய பதவி
எதையும் தரவில்லை. தினகரனை கட்சியில் சேர்க்கவும் இல்லை.
இதன் காரணமாக, அவர்களுக்கு மக்களிடம் அறிமுகம் கிடைத்து வலுப்பெறும்
வாய்ப்பு ஏற்படவில்லை. அத்துடன் 1991ம் ஆண்டு மகத்தான வெற்றி பெற்ற அண்ணா
திமுக அடுத்த தேர்தலிலே படுதோல்வியை அடைந்தது கட்சியின் அடிமட்டத் தொண்டனை
உறுத்தியது உண்மை. ஜெயலலிதா 2011ம் ஆண்டு சசிகலா, தினகரன், வெங்கடேஷ்
உள்ளிட்ட மன்னார்குடி குடும்பத்தினரை கட்சியிலிருந்தும் தனது
இல்லத்திலிருந்தும் வெளியேற்றியபோது, கட்சித் தொண்டர்கள் தீபாவளியைப் போல்
பட்டாசு வெடித்து, இனிப்புக் கொடுத்து கொண்டாடினர். அதை, தனக்கு விடப்பட்ட
எச்சரிக்கையாக சசிகலா குடும்பத்தினரும் எடுத்துக்கொள்ளவில்லை. ஜெயலலிதாவும்
ஒரு பாடமாகக் கற்றதாகத் தெரியவில்லை.
ஜெயலலிதா இருந்தபோது யாரையும் வாரிசாக அறிவிக்கவில்லை, அடையாளம் காட்டவும்
இல்லை. அதனால், அவருக்குப் பிறகு வலுவான தலைமை இல்லாத நிலை ஏற்பட்டது.
எனவே, கட்சி தொடர வேண்டுமானால், கூட்டுத் தலைமையே சரியான பாதை என்பதை
எடப்பாடி அணியினரும், ஓ.பி.எஸ். அணியினரும் இப்போது புரிந்து
கொண்டிருக்கிறார்கள். காரணம், இவர்களில் யாருக்குமே மக்களை ஈர்க்கும் சக்தி
இல்லை என்பது வெளிப்படை. ஒரு வகையில் இது ஜனநாயகத்துக்கு மிகவும்
சாதகமானது. இதுபோன்ற கூட்டுத் தலைமை அரசு அமைத்தால் எல்லா அதிகாரமும்
ஒருவரிடமே குவியும் ஆபத்து இருக்காது. அதன் விளைவாக, பெரிய ஊழலில் ஈடுபடும்
துணிவும் வராது. தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் இல்லாததால், தவறான
செயல்களால் மக்கள் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்வோம் என்ற கவலை
அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எது எப்படியோ கூட்டுத் தலைமை அமைந்து,
கட்சிக்கும் ஆட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது விளைந்தால் போதும் என்ற
நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment