ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என்று உத்தரவிட்டும் அதனை மீறியது ஏன்
என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய அரசின் கட்டாய ஆதார் அட்டை கொள்கையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட
வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பாக நடைபெற்று
வருகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அரசியல் சாசன
அமர்வு விசாரித்து வருகிறது. அப்போது வருமான வரி தாக்கல் செய்ய ஆதாரை
கட்டாயமாக்கியது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
எழுப்பியது.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், ஆதாரை வருமான வரி
தாக்கலில் கட்டாயமாக்கினால் மட்டுமே சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனையை தடுக்க
முடியும் என்று தெரிவித்தது.
எனினும் ஆதார் எண்ணை எந்தெந்த திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்று
உச்சநீதிமன்றம் ஒரு பட்டியல் வெளியிட்டுள்ள நிலையில் அதனை பின்பற்றாமல்,
மத்திய அரசு செயல்படுவது ஏன் என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேட்டனர்.
இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்ததோடு,
ஏப்ரல் 26ம் தேதிக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எனவே
ஆதார் அட்டையை அரசின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தலாமா என்பது குறித்து
அன்று இறுதி முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே வழங்கியுள்ள உத்தரவில் மகாத்மா காந்தி
ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டம், ஓய்வூதிய திட்டங்கள், வங்கி கணக்கு
திட்டங்கள் மற்றும் வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் போன்ற திட்டங்களுக்கு
ஆதார் அட்டையின் பயன்பாட்டை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment