சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு
வயது 47.
அதிமுக பொதுச்செயலாளரான சசிகலாவிற்கு இப்போது கெட்ட நேரம்போலும். சொத்துக்
குவிப்பு வழக்கில் சிகிச்சை சிறையிலுள்ளார் சசிகலா. அவரது அக்கா மகன்
டிடிவி தினகரனை அதிமுக துணைப் பொதுச்செயலாளராக்கினார். அவரும் ஆர்.கே.நகர்
இடைத் தேர்தலில் போட்டியிட்டு எப்படியாவது வெற்றி பெற்று முதல்வராகிவிட
வேண்டும் என்று முடிவு செய்து களமிறங்கினார்.
ஆனால் டிடிவி தினகரன், வாக்காளர்களை பணத்துக்கு கையேந்த வைத்ததற்காக
ஆர்.கே.நகர் தேர்தலே ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையில், சசிகலாவின்
2வது அண்ணன் வினோதகனின் மகன், மகாதேவன் (47) இன்று காலமானார். இவர்
தஞ்சையில் வசித்து வந்தவர்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, ஜெ. பேரவை மாநில செயலாளராக சில காலம் இவர்
பணியாற்றியவர். தஞ்சை வட்டாரத்தில் அதிமுகவில் ஓரளவுக்கு செல்வாக்கு
உள்ளவர் மகாதேவன். 2011ல் சசிகலா மற்றும் அவரது உறவினர்களை
அதிமுகவிலிருந்து ஜெயலலிதா நீக்கினார். அப்போது மகாதேவனும் கட்சியிலிருந்து
நீக்கப்பட்டார்.
பிறகு கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், இன்று, திருவிடைமருதூர் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்காக
மகாதேவன் இன்று சென்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நிலைமை
மோசமாக இருந்ததால், அவர் கும்பகோணத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு
சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், கும்பகோணம் மருத்துவமனையில் அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள்,
மகாதேவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் சசிகலா
குடும்பத்தில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது. இதனிடையே சசிகலா அவரது
அண்ணன் மகன் மகாதேவன் இறுதி சடங்கில் பங்கேற்க சிறையிலிருந்து பரோலில்
வெளியே வருவார் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment