மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் விவசாயிகள் நடத்திய
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து
உரிய பதில் வரும் வரை தங்களது போராட்டம் தொடரும் என விவசாயிகள் சங்கத்
தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய
வேண்டும், வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர்
அய்யாகண்ணு தலைமையில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் 29வது நாளை
எட்டியது. மத்திய அரசு சார்பில் எந்த உறுதியும் அளிக்காததால் விரக்தி
அடைந்த விவசாயிகள் நேற்று நாடாளுமன்றம் முன்பு திடீரென தங்களது ஆடைகளை
களைந்து நிர்வாணமாக சாலையில் ஓடி, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி
பரபரப்பை ஏற்படுத்தினர்.
இன்றும் விவசாயிகள் மண் சோறு சாப்பிட்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி
கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை தேமுதிக தலைவர்
விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
அலுவலகத்தில், அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்
கூறுகையில், தமிழக விவசாயிகளின் போராட்டம் உணர்வு பூர்வமானது. விவசாயிகள்
பிரச்சினைக்கு அமைச்சரவை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய
அரசு மீது விவசாயிகள் நம்பிக்கை வைக்க வேண்டும்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு விவசாயிகள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம்
அளித்து வருகிறது. விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க தேவையான முயற்சிகள்
மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
மேலும் விவசாயிகளின் கோரிக்கை மனுவை பிரதமரிடம் அளிப்பதாகவும் உறுதியளித்த
அவர், விவசாயிகள் போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து
செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து
பதில் வரும்வரை டெல்லியில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம்
தொடரும் எனக் கூறினார்.
No comments:
Post a Comment