மவ்லவீ SNR ஷவ்கத்அலி மஸ்லஹி, பேரா,DUIHAகல்லூரி,தாராபுரம்.
மார்ச் என்றாலே நம் பள்ளிப்பிள்ளைகளுக்கு சட்டென நினைவுக்கு வருவது முழு ஆண்டுத்தேர்வு தான். இத்தேர்வுதான் அவரவரது எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. குறிப்பாக பத்தாம், பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள். எக்ஸாம் எனும் தேர்வுகள் பள்ளிப் பிள்ளைகளுக்கு அவசியமான ஒன்றுதான். தேர்வின் வழியாகத்தான் ஒரு மாணாக்கரின் திறன், திறமை, தகுதி என்ன என்பதை அறியமுடியும்.
மார்ச் என்றாலே நம் பள்ளிப்பிள்ளைகளுக்கு சட்டென நினைவுக்கு வருவது முழு ஆண்டுத்தேர்வு தான். இத்தேர்வுதான் அவரவரது எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. குறிப்பாக பத்தாம், பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள். எக்ஸாம் எனும் தேர்வுகள் பள்ளிப் பிள்ளைகளுக்கு அவசியமான ஒன்றுதான். தேர்வின் வழியாகத்தான் ஒரு மாணாக்கரின் திறன், திறமை, தகுதி என்ன என்பதை அறியமுடியும்.
இது விசயத்தில் தமிழகப்பள்ளி கல்வித் துறையினரின் பல திட்டங்கள் நடைமுறைக்கு முற்றும் மாற்றமாக இருந்தாலும் இதைத்தவிர நமக்கு மாற்றுவழி வேறில்லை என்பதையும் நாம் ஒப்புக்காௌ்ளத்தான் வேண்டும்.
படிப்பு மனிதமூளைக்கு மிக அவசியமான ஒன்று. படிப்பறிவு இல்லாமல் வாழலாம் ஆனால் வளரவோஅல்லது வாழ்வில்உயரவோ முடியாது. எனவே படிப்பறிவு மிகமிக அவசியம். ஆனால் நமது பிள்ளைகள் இன்றைக்கு கல்வி விசயத்தில் எப்படியிருக்கிறார்கள் ? முழுமையான கவனத்துடன் படிக்கிறார்களா அல்லது அரைகுறையாகவா? ஆர்வத்துடனா இல்லை எரிச்சலுடனா? விரும்பியா அல்லது விரும்பாமலா? இக்கேள்விகளுக்கு சட்டென்று நம்மால் பதிலைக்கூற முடியவில்லை. ஆனாலும் இக்கல்வியைக் கட்டாயம் படித்து பரிட்சை எழுதித்தான் ஆக வேண்டியதிருக்கிறது.
எனவே எதிர்வரும் தேர்வை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்றுதான் இப்போது நாம் யோசிக்க வேண்டும். இந்த நிறைவு நிலையில் தேர்வு எழுதுவதற்குத் தயாராக உள்ள நாம் இனி செய்ய வேண்டியது என்ன என்பதை ஒரு ஏழுவழிகளின் வழியே மிக எளிதாக புரிந்து கொள்ளலாம். அவற்றை இனி நாம் வரிசையாகப் பார்க்கலாம்....
1. KNOWLEDGE - படிப்பறிவு : அறிவில் இருவகையுண்டு. ஒன்று அன்றாட அனுபவங்களால் ஏற்படும் அனுபவ அறிவு. மற்றொன்று படித்து அறியும் படிப்பறிவு. இதில் ஒன்று மட்டும் இருந்தால் போதாது. இரண்டு அறிவுகளும் இணைந்திருந்தால் தான் அவன் வாழ்க்கையில் உயர முன்னேற முடியும். ஒரு பறவைக்கு உள்ள இருசிறகுகளைப் போன்றதுதான் அவ்விருஅறிவுகளும். ஒற்றை இறகால் பறக்கமுடியுமா என்ன?
எனவே படித்து அறியும் படிப்பில் நாம் அதிக அக்கறையெடுத்து படிக்க வேண்டும். படிப்புதான் நம்மை மேம்படுத்தும் என்பதில் எவருக்கும் மறு கருத்தில்லை. நம்மைச் சுற்றியுள்ள படிக்காதவர்கள், எழுத்தறிவில்லாதவர்கள் என அன்றாடம் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களும், சிரமங்களும் அப்பப்பா அவை எந்த எண்ணிலும் அடங்காதவை. அவை நமது படிப்பறிவின் உயர்வை, உன்னதத்தை நமக்கு நன்குணர்த்துகிறதல்லவா..?
எனவே படிப்பில் குறிப்பாக தேர்வில் அதிக அக்கறையுடன் கட்டாயம் நல்ல மதிப்பெண் பெற முயற்சிக்க வேண்டும். ஏட்டுக்கல்வி மட்டும் போதாது நம் நாட்டுக்கல்வியும் அனுபவப்பூர்வ
மாக இணைந்திருக்கவும் வேண்டும். அதுதான் மெய்யான கல்வி. அதற்கு ஆரம்பப்பாடங்கள் அவசியம் என்பதுமட்டும் தான் தற்போது நாம் உணர்ந்தறிய வேண்டிய ஒன்று.
2. KNOWING -ஆழமாக அறிதல் : எந்த ஒன்றையும் நாம் படிப்பது அதுவும் மேலோட்டமாக, தினசரி செய்தித்தாள்களை படித்தும் படிக்காமலும், பார்த்தும் பார்க்காமலும் புரட்டுவது
போல படிப்பது என்பது தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கு முற்றும் ஏற்புடையதன்று. எனவே நாம் எந்த ஒன்றைப்படிக்கும்போதும் ஆழமாக, விரிவாக, விளக்கமாக படிக்க வேண்டும். அதுதான் என்றைக்குமே சரியானது; முறையானது. அரைகுறையாக படிப்பது மிகவும் ஆபத்தானது. எனவே
நாம் நமது பாடங்களைப் படிப்பதில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். அகல உழுவதை விட ஆழஉழுவது மேல் என்பார்கள் அதுபோல நாமும் நமது படிப்பில் அதிகமாக படிப்பதுடன் ஆழமாகவும், அழுத்தமாகவும் படிக்க முயற்சிக்க வேண்டும்.
முயற்சியில்லாமல் எதுவுமே இல்லை சற்று ஆர்வமுடன் படித்தாலே எதுவும் நம் மனதில் ஆழமாக பதிந்துவிடும். நமது எதிர்காலத்தை நாம் சற்று நிதானமாக நினைத்துப் பார்த்தாலே போதும் நமது படிப்பின் மீது அதிக ஆர்வமும் அக்கறையும் ஏற்பட்டுவிடும்
2. KINETIC - நல்ல சுறுசுறுப்பு : படிப்பில் நாம் என்றைக்குமே அதிக சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். இதுதான் நம்மை, நம்மிடமுள்ளகல்வி அறிவை தூண்டிக் கொண்டேயிருக்கும். இல்லையேல் சோம்பல் குணம் நம்மை ஆட்சி செய்ய ஆரம்பித்துவிடும்.
டீ, காபி, ஹார்லிக்ஸ், பால், தயிர் மோர், ஜூஸ், கூல்டிரிங்ஸ் போன்றவற்றை அவரவர்களின் சூழலுக்கு ஏற்ப, சுவைக்கு ஏற்ப குடித்துக்கொள்வதில் மட்டும் சுறுசுறுப்பு இல்லை.
தேர்வுக்கு தயாராகும் முறையிலும், பாடங்களை சரிவர படிப்பதிலும் இருக்கிறது இன்னொரு சுறுசுறுப்பு.
நோஞ்சான்களை விட துருதுருப்புப் பிள்ளைகள்தான் நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள் என்கிறது ஒருபள்ளியின் புள்ளிவிபரம். அதை ஆர்வம் என்றும் நாம் சொல்லிக்கொள்ளலாம் படிப்பில் ஆர்வம் வந்துவிட்டால் அந்த சுறுசுறுப்பு தானாகவே வந்துவிடும். அதற்கு முன் நம்மிடமுள்ள சோம்பலை நன்கு தீயிட்டுக் கொளுத்தி சாம்பலாக்க வேண்டும். இல்லையேல் சுறு சுறுப்பு சுருண்டு படுத்துக்கொள்ளும்
3. KILLING - பழுதை நீக்குதல் : படிக்கிற காலத்தில் அதுவும் தேர்வு நேரத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும். அவற்றை நாம் உடனுக்குடன் நீக்கிவிட வேண்டும். தேவையில்லாமல் நமது மனதை அங்கும் இங்கும் அலைய விடக்கூடாது. நாம் நமது பாடத்தில் மட்டுமே ஒரே மனதுடன் கவனத்தை செலுத்த வேண்டும். யாருக்குத்தான் இல்லை பிரச்சினைகளும், சிக்கல்களும்...! குறிப்பாக நம் மனதில் மனஅழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கண்ட கண்ட விசயங்களை நினைத்து நாம் நம்மையே பலவீனப்படுத்திக் கொள்ளக்கூடாது. தோற்றுப்போய் விடுவோமோ என்ற எண்ணம் அறவே கூடாது. அப்படி தோற்றால் என்ன தேர்வில் தானே தோற்றோம் வாழ்க்கையில் அல்ல! என்று நினைக்க வேண்டும்.
உண்மையில் அழித்தல் என்பது நம்மை அழிக்கும் எண்ணங்களை அழிப்பதில் தான் இருக்கிறது. இல்லையெனில் தீய நினைவுகளே நம்மை கொன்றுபோடக் கூடும். அல்லது அது தற்கொலையாகக் கூட இருக்கலாம். ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டவர்கள் எதை சாதித்தார்கள்? யோசித்தால் நமது குறைகள் யாவும் குறைந்து போகும்.
4. KEY WAY - சுருக்கமான வழி : பாடங்களை படிக்கும் போது அதனை நன்கு நினைவில் வைத்துக் கொள்வதற்கென ஒரு சுருக்கமான குறியீட்டுச் சொற்களை, பொருட்களை, சிறுஎண்களை, வண்ணங்களை நினைவூட்டிகளாக வைத்துக் கொள்வது தேர்வு நேரங்களில் அதிக பயன்களைத் தரும். எந்த வினாக்களுக்குமான விடைகளை "சாட்ரூட்"டில் மிகச் சரியாக வரைந்து வைத்துக் கொள்ள முடியும். இதனால் பிட் காப்பி அடிப்பது போன்ற தவறுகளிலிருந்து நம்மை
முற்றிலும் அது பாதுகாக்கும்.
நாம் படிப்பதையெல்லாம் அவ்வப்போது நினைவுச் சின்னங்களுக்குள் பாதுகாப்பாய் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால் தேர்வு நேரங்களில் நமக்குத் தேவையானவற்றை தேடித் தேடி அலைய வேண்டியதில்லை. வேண்டிய இடங்களில் வேண்டியவற்றை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளமுடியும். நமது மூளை அப்படி நல்லமைப்பின்படி தான் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. இது முடியாத ஒன்றல்ல கொஞ்சம் இதற்காக நாம் பயிற்சி எடுத்தால் போதும் அவை பழகிப்போய் விடும்.
5. KNITTING - தொடர்பு படுத்துதல் : படித்த பாடங்களை ஒன்றுடன் ஒன்று அவ்வப்போது தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். அப்போது தான் படித்த பாடங்கள் மறக்காமல் நன்கு நினைவில் நிற்கும். நாம் படிக்கும் எந்தவொரு பாடமும் மற்றொரு பாடத்துடன் தொடர்புடைய ஒன்றுதான்.
எனவே அப்பாடங்களை எப்படி நாம் தொடர்புபடுத்தப் போகிறோம் என்பதில் தான் இருக்கிறது நமக்கானமுழு வெற்றி. கணக்குப்பாடம் அது இதர துறைகளுடன் மிகவும் தொடர்புடைய ஒன்றுதான் என்பது யாவரும் அறியாத ஒன்றல்ல ! எந்த ஒன்றை யும் நாம் மற்றொன்றோடு தொடர்புபடுத்திப் படிக்கும் போதுதான் நமது நினைவுத்திறன் கூடுதல் பலம்பெறுகிறது. நமது நினைவாற்றல் சீராகி விட்டால் இதைவிட வேறு என்ன வேண்டும் நமக்கு? நினைவாற்றல் வளர வல்லாரைக் கீரையும், இளம் வெண்டைக்காயும், கொஞ்சம் மீனும் சாப்பிட்டால் போதுமா? அதற்காக பயிற்சி செய்து பழக வேண்டாமா நாம்? உலகமே ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதை மட்டும் என்றைக்கும் நாம் சற்றும் மறந்து விடக்கூடாது.
6. KEEPING - விடாது கவனித்தல் : பாடங்களை நாம் தொடர்ந்து விட்டு விடாது கண்ணும், கருத்துமாக கவனமுடன் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். திரும்பத்திரும்ப படிக்க
வேண்டும். நமது மூளைஅப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. ஓரிருநாள் நாம் சற்று மறதியாக இருந்துவிட்டால் போதும் ஏற்கனவே படித்த யாவும் திடீரென காணாமல் போனது போல் ஆகிவிடும். பிறகு அவற்றை மீட்டெடுப்பதென்பது மிகவும் சிரமமான ஒன்று எனவே பரிட்சை முடியும் வரை நாம் நமது படிப்பை நிறுத்தவே கூடாது.
படிப்பதோடு அப்பாடங்களை நன்கு கவனித்துப் படிக்க வேண்டும். அடிக்கடி வேறுவேறு பாடங்களுடன் நாம் படித்தவற்றை தொடர்புபடுத்திப் பார்க்கவும் வேண்டும். சும்மா வெறும் மனப்பாடமாய் படிப்பதில் எவ்விதப் பலன்களும் இல்லை. எனவே நாம் படிக்கும் எந்த ஒன்றையும் சற்று கவனமுடன் படித்தாலே போதும் அது ஆழ்மனதில் அழகாய் பதிந்து விடும். பிறகு என்ன தேர்வில் நாம் தான் முதலிடம் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன...?
♦ KING MAKER - சிறப்பு ஆசிரியர் : இப்படியெல்லாம் படித்தால் நிச்சயம் அவர் தான் கிங்மேக்கர் அதாவது அவர்தான் நல்லாசிரியர்களை உருவாக்குபவர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இன்றைக்கு ஆசிரியர்கள் தேவையில்லை நல்லநல்ல மாணாக்கர்களை உருவாக்கும் நல்லாசிரியர்கள்தான் தேவை. அதற்கு மேற்கூறிய ஏழுவழிகளில் ஏதோவொன்றை வழுவாது பற்றிப்பிடித்தாலும் கூட அந்த வெற்றி வாசலை நம்மால் நிச்சயம் எட்டிப் பிடித்து விடமுடியும்.
வாருங்கள் !
தேர்வுகளை எழுதுவோம் !
வெற்றிகளால் எழுவோம் !
நன்றி : சமூகநீதி முரசு அறக்கட்டளை
No comments:
Post a Comment