ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்தின் போது ஓ.பி.எஸ். அணியும், டிடிவி
தினகரன் அணியும் திடீரென மோதிக் கொண்டனர். இதில் தினகரன் ஆதரவு மேலூர்
எம்.எல்.ஏ. செல்வம் உள்பட பலர் காயமடைந்தார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல்
நடைபெறவுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள
நிலையில் தேர்தல் நடைபெற உள்ளதால் ஓபிஎஸ், சசிகலா அணியினரிடையே கடுமையான
போட்டி நிலவுகிறது. இரு அணியினரும் வெற்றி பெற்று தங்கள் பலத்தை நிரூபிக்க
தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகரில் ஓபிஎஸ்
தரப்பினர் பிரசாரம் மேற்கொண்டிருந்தனர். அப்போது தினகரன்
ஆதரவாளர்களுக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை
ஒருவர் கல்வீசி தாக்கிக்கொண்டனர். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில்
இரண்டு பேரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் வாய் பேச முடியாத
மாற்றுத் திறனாளி ஆவார். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளார்கள்.
மேலும் நேதாஜி நகரில் உள்ள தினகரன் அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல்
நடத்தப்பட்டது. இதையடுத்து, அந்த இடத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
பின்னர், காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலின் போது தினகரன் ஆதரவு மேலூர்
எம்.எல்.ஏ.செல்வத்தின் தலையில் கற்கள் விழுந்து மண்டை உடைந்தது. இதையடுத்து
காயமடைந்த அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் எம்எல்ஏ செல்வத்தை முதல்வர்
எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நெருங்க நெருங்கி வரும் நேரத்தில்
அ.தி.மு.க-வின் இரு அணிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment