ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன் வெற்றி
பெற்றால் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் என பெரும்பான்மையானோர் கருத்து
தெரிவித்துள்ளதாக புதிய தலைமுறை டிவி நடத்திய கருத்துக் கணிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறைக்கு சென்றுள்ளார்.
என்றாலும் கட்சியை சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில்
வைத்துள்ளார்.
ஆட்சியை சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வருகிறார்.
அமைச்சர்கள் அவ்வப்போது பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவிடம் ஆலோசனை
நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆர்.கே.நகரில் வரும் 12 ஆம் தேதி இடைத்
தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து அந்த தொகுதி மக்களின் மனநிலையை
அறிந்து கொள்ளும் விதமாக புதிய தலைமுறை டிவி கருத்துக்கணிப்பு நடத்தியது.
அதில் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றால், டிடிவி தினகரன் முதலமைச்சராகப்
பொறுப்பேற்பார் எனக் கருதுகிறீர்களா ? என சர்வே நடத்தப்பட்டது. அதில் ஆம்
என 44.96 சதவீதம் பேரும், இல்லை என 28.97 சதவீதம் பேரும், கருத்துக்
கூறவிரும்பவில்லை என 26.07 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் உங்கள் வாக்கை தீர்மானிப்பது எது? என்ற கேள்விக்கு கட்சி என
19.62 சதவீதம் பேரும், வேட்பாளர் என 39.51 சதவீதம் பேரும், சின்னம் என
13.53 சதவீதம் பேரும், தொகுதி பிரச்சினை என 23.71 சதவீதம் பேரும், பணம்/
பரிசுப் பொருட்கள் என 1.82 சதவீதம் பேரும் கருத்துக் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment