வீட்டை எழுதி வைத்தால்தான் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவேன் என்று
அடாவடியாக அடம் பிடித்துள்ளார் மாப்பிள்ளை. மணமகள் வீட்டார்
சம்மதிக்காததால் திருமணத்திற்கு முதல்நாள் இரவு மாயமாகிவிட்டார்.
சென்னையில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக போலீசில் புகார்
அளித்தும் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற புகார்
எழுந்துள்ளது.
நீயா நானா நிகழ்ச்சியில் பெண்கள் தங்களின் பிறந்த வீட்டில் இருந்து
திருமணத்திற்கு சீதனம் கேட்டதற்கு லபோ திபோ என்று இளைஞர்கள் குதித்தனர்.
அந்த பெண்களை கேவலமாக திட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். ஆண்கள்
எல்லாம் வரதட்சணையே கேட்பதில்லை என்பது போல பேசினர்.
இப்போது மணமகள் வீட்டார் வரதட்சணையாக வீட்டை எழுதி கொடுக்காததால்
சென்னையில் திருமணத்திற்கு முதல் மாப்பிள்ளை ஒருவர் மாயமாகியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் சாலையை சேர்ந்த கணேசன், வசந்தா
தம்பதியின் மகள் சுமதி. சாப்ட்வேர் என்ஜினியரான சுமதி ஐடி நிறுவனத்தில்
மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் வேலை செய்து வருகிறார். இவரது பெற்றோர்
சுமதிக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளானர்.
செய்யாறு பகுதியை சேர்ந்த நாராயணசாமி - சுலோச்சனா தம்பதியின் மூத்த மகன்
அருண்குமார் என்பவரை திருமணம் பேசி முடித்தனர். அருண்குமார் சென்னையில்
உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை செய்து வருகிறார்.
அப்போது பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளையை பிடித்ததால் திருமணத்திற்கு
ஏற்பாடு செய்துள்ளனர்.
வரதட்சணை
கடந்த மாதம் சுமதிக்கும் அருண்குமாருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
பின்னர் மணமகன் வீட்டார் கேட்ட வரதட்சணையை பெண் வீட்டார் கொடுப்பதாக
தெரிவித்தனர். கட்டில், மெத்தை, சீர் பொருட்கள் எல்லாமே விலை உயர்ந்ததாக
கேட்டுள்ளார் அருண்குமார். அதையும் பெண் வீட்டார் வாங்கி தருவதாக
தெரிவித்துள்ளனர்.
தாலி கட்டமாட்டேன்
திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் அருண்குமார் வரதட்சணையாக
மாப்பிள்ளையின் அப்பா நாராயணசாமி வீட்டை எழுதி கேட்டுள்ளார். அதற்கு பெண்
வீட்டார் முதலில் திருமணம் நடக்கட்டும். பின்னர் மாப்பிள்ளை பெயரில்
நாங்கள் வீட்டை எழுதி கொடுக்கிறோம் என்று கூறியுள்ளனர். அதற்கு
மாப்பிள்ளையோ நீங்கள் வீட்டை எழுதி கொடுத்தால்தான் நான் உங்கள் பெண்
கழுத்தில் தாலி கட்டுவேன் என்று தெரிவித்துள்ளார்.
மணமகன் மாயம்
ஒருவழியாக திங்கட்கிழமையன்று தேனாம்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில்
திருமண ஏற்பாடு பிரம்மாண்டமாக செய்யப்பட்டது. திருமணத்தின் முதல் நாள்
இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது மணமகளுக்கு அலங்காரம்
செய்யப்பட்டு மேடைக்கு அழைத்து வந்தனர். மணமகனையும் அழைத்து வர அவரது
அறைக்கு சென்றனர். அப்போது மணமகன் அருண்குமார் திடீரென மாயமானார்.
போலீசில் புகார்
திருமண மண்டபம் முழுவதும் மணமகனை தேடியும் அவர் எங்கும் இல்லை. இதனால்
திருமணம் பாதியிலேயே நின்றுவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட சுமதி, தன்னை
திருமணம் செய்து கொள்ள அதிக வரதட்சணை கேட்டு திருமண நாள் அன்று அருண்குமார்
மாயமாகிவிட்டார் என்று தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்
புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மணமகன்
அருண்குமாரை தேடி வருகின்றனர். மணமகன் மாயமாகி நான்கு நாட்கள் ஆகியும்
இதுவரை அவர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
நீயா நானாவில் பேசிய பெண்களுக்கு எதிராக பதிவு போட்ட யோக்கிய சிகாமணிகள்
இதற்கு என்ன பதிவு போடப் போகிறார்களோ?
No comments:
Post a Comment