சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம்
மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க இரண்டாக உடைந்து
இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் அதிமுகவின் சின்னம் இரட்டை
இலையை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. அதிமுக இணைந்தால்தான் இரட்டை
இலை சின்னம் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனால்
இரு அணிகளும் இணைய முடிவு செய்தன.
இதையடுத்து இரு அணிகள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த குழுக்கள்
அமைக்கப்பட்டன. ஆனால் இதுவரை பேச்சுவார்த்தை நடந்த பாடில்லை. ஒபிஎஸ்
அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, ஜெயலலிதா மரணத்துக்கு
சிபிஐ விசாரணை வேண்டும், சசிகலா கட்சியில் இருந்து முற்றிலும்
அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும் தங்களின் இரண்டு கோரிக்கைகளை தவிர
வேறு எந்த நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை என்றும், இவற்றை நிறைவேற்றினால்
இரு அணிகளும் இணைவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே
பேச்சுவார்த்தை நடத்த முடியும் என அதிமுக அம்மா அணியின் சார்பில் முன்னாள்
அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பேச்சுவார்த்தையில்
முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க அம்மா
கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் உள்ள கட்சித்
தலைமையகத்தில் அவசரமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட
செயலாளர்கள், அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன்,
செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், மற்றும் மக்களவை
துணை சபாநாயகர் தம்பிதுரை, வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோர் கலந்து
கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் இரட்டை இலையை மீட்பது, கட்சி பதவிகள் குறித்து பிரமாண
பத்திரங்களில் மாற்றம் செய்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து
ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment