அமைச்சர்கள் அனைவரும் தன்னை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து கூறவே
வந்தனர். நாங்கள் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தோம் என்றும் அமைச்சர்
விஜயபாஸ்கரை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் டிடிவி தினகரன்
கூறியுள்ளார்.
ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த சர்ச்சை வெடித்தது.
இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் ஆளும் கட்சிக்கு
கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. வருமான வரித்துறையின் விசாரணையில்
முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பலரும் சிக்கினர்.
அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்தாக வேண்டும் என
டெல்லியில் இருந்து நெருக்கடி அதிகரித்தது. இதனால் விஜயபாஸ்கரை ராஜினாமா
செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார். ஆனால் விஜயபாஸ்கரோ
அதெல்லாம் முடியாது என மறுத்துவிட்டார். அவருக்கு டிடிவி தினகரன் முழு
ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று டிடிவி தினகரன் வீட்டில் திடீர் ஆலோசனைக்கூட்டம்
நடைபெற்றது. அமைச்சர்கள் பலரும் டிடிவி தினகரனின் அடையாறு வீட்டிற்கு
வந்தனர். லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரையும் இந்த கூட்டத்தில்
பங்கேற்றார்.
இந்த சந்திப்பு குறிப்பு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் இது
மரியாதையான சந்திப்புதான் என்றார். அமைச்சர்கள் அனைவரும் புத்தாண்டு
வாழ்த்து கூற வந்தனர். நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம் என்றார்.
தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி
செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். விஜயபாஸ்கர் மீது எந்த
தவறும் இல்லை என்று என்னை சந்தித்து கூறியுள்ளார். ஐடி ரெய்டு
நடத்தப்பட்டதாலே அமைச்சர் பதவி விலக வேண்டியது இல்லை என்றார்.
விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய எந்த ஒரு அமைச்சரும் வலியுறுத்தவில்லை என்றும்
அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமியிடம் விஜயபாஸ்கர் பற்றி பேசவேண்டிய
அவசியமில்லை என்றும் கூறினார்.
டாக்டர் அம்பேத்கார் பிறந்தநாள், புத்தாண்டுக்காக அனைவரும் வந்தனர். பல
பிரச்சினைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம் என்றார். மேலும் அவர், இரட்டை இலை
முடக்கத்தில் மத்திய அரசு தலையீடு இருப்பதாக நினைக்கவில்லை.
எந்த விசாரணை நடந்தாலும் எத்தனை சோதனை நடந்தாலும் அமைச்சர்கள் அரசு பற்றி
எந்த தவறும் கூறப்போவதில்லை என்றும் அமைச்சரவையில் மாற்றம் எதுவும்
வரப்போவதில்லை என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment