ஜல்லிக்கட்டு ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் முடிவில்
வன்முறை வெடித்தது. இது தொடர்பான விசாரணையில் பொதுமக்கள் எந்தவொரு
தயக்கமுமின்றி பிரமாண வாக்கு மூலம் அளிக்கும்படி தனிநபர் விசாரணை
ஆணையத்தின் தலைவர் ஒய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு
நடத்த அனுமதி அளிக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில்
ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கலைத்த போது ஜனவரி மாதம் 23-ம் தேதியன்று
சென்னையில் பெரும் கலவரம் வெடித்தது.
கல்வீச்சு, குடிசை, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைப்பு என
போலீசாரே வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்களின் ஒளிப்பதிவுகள் சமூக
வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து
இந்த வன்முறை குறித்து, நீதி விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்
மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து
எதிர்க்கட்சிகளும் போலீசாரின் வன்முறைகள் குறித்து கண்டனம் தெரிவித்தன.
பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் உட்பட, சட்டம் -
ஒழுங்கு பாதிக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் சூழல் குறித்து விசாரணை செய்ய
தமிழக அரசு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரனை கொண்ட தனிநபர்
விசாரணை ஆணையத்தை கடந்த ஜனவரி 31-ம் தேதி அமைத்தது. இதனையடுத்து சட்டம்
ஒழுங்கு, காவல்துறை அத்துமீறல் குறித்து புகார் கூறப்பட்ட பல்வேறு
இடங்களுக்கு சென்ற ஓய்வு நீதிபதி ராஜேஸ்வரன் முதற்கட்ட ஆய்வு பணியில்
ஈடுபட்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள ஆணைய
அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம்
தொடர்பாக இது வரை 128 பிரமாண பத்திரங்கள் வாக்குமூலம் வந்துள்ளதாக
கூறினார். மேலும், ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் குறித்து அச்சமின்றி மக்கள்
பிரமாண வாக்கு மூலம் வழங்க 7ம் தேதி மீண்டும் நாளிதழில் விளம்பரம்
அளித்திட உள்ளதாகவும், பொதுமக்கள் எந்தவொரு தயக்கமுமின்றி பாதிக்கப்பட்ட
விஷயங்களை தெரிவிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
தமது தலைமையில் விசாரணை நான்கு மாதங்கள் நடைபெறும் எனவும் நீதிபதி
ராஜேஷ்வரன் தெரிவித்தார். மேலும் தனது விசாரணையின் போது அனைத்து பத்திரிகை
மற்றும் ஊடகங்களுக்கு சம்மன் அனுப்பபடும் எனவும் அனைத்து போட்டோ மற்றும்
வீடியோ ஆதராங்கள் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அவர்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment