நாட்டின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் வாஜ்பாயின்
தீவிர ஆதரவாளரும் ராஜஸ்தான் மாநில முதல்வருமான வசுந்தரராஜே சிந்தியா
நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய வெளியுறவுத் துறை
அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பிரதமர் மோடி
இத்தகைய முடிவு எடுத்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியில்
பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த போது அக்கட்சியின் மூத்த
தலைவர்களான அத்வானி உள்ளிட்டோர் ஓரம்கட்டப்பட்டனர். அவர்களது ஆதரவாளர்களான
சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் வேறுவழியே இல்லாமல் அமைச்சரவையில்
சேர்க்கப்பட்டனர்.
தற்போது அத்வானியின் தீவிர ஆதரவாளரும் மத்திய
வெளியுறவுத் துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் உடல்நலம்
பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இயலாத நிலை
இருக்கிறது.
முதல்வராக மனோகர் பாரிக்கர்
அதேபோல்
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், கோவா
முதல்வராக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சர் அருண்ஜேட்லி வசம் பாதுகாப்புத்
துறை கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சராகும் சுரேஷ் பிரபு
இந்த
நிலையில் ஏப்ரல் 12-ந் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர்
மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக டெல்லி
தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு,
பாதுகாப்புத் துறை அமைச்சராக்கப்படலாம். ரயில்வே இணை அமைச்சர் மனோஜ்
சின்ஹா, ரயில்வே துறை அமைச்சராக்கப்படலாம்.
வெளியுறவு துறை அமைச்சராக வசுந்தரராஜே
மேலும்
ராஜஸ்தான் முதல்வரும் வாஜ்பாயின் தீவிர ஆதரவாளருமான வசுந்தரராஜே
சிந்தியாவையும் மத்திய அமைச்சரவையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
வசுந்தராஜே சிந்தியாவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி
வழங்கப்படுகிறதாம்.
புதிய முதல்வர் ஓம் மாத்தூர்
தற்போதைய
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால்
அவரை மாற்றிவிட்டு வசுந்தரராஜேவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
அப்படி வசுந்தரராஜே சிந்தியா மத்திய அமைச்சராகும் நிலையில் ராஜஸ்தான் மாநில
முதல்வராக பாஜக பொதுச்செயலர் ஓம் மாத்தூர் நியமிக்கப்படலாம்.
ஜேபி நட்டா, கல்ராஜ் மிஸ்ரா
மேலும்
மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, எதிர்வரும் ஹிமாச்சல பிரதேச சட்டசபை
தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட உள்ளார். மற்றொரு மத்திய
அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட இருக்கிறார் என்கின்றன
டெல்லி தகவல்கள்.
No comments:
Post a Comment