தென் மாநிலங்கள் தனிநாடாக பிரிய நேரிடும் என்று மக்களவை காங்கிரஸ்
குழு தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்
இந்தியர்களை கறுப்பர்கள் என பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய்
குறிப்பிட்டதற்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
டெல்லியில் அண்மையில் ஆப்பிரிக்கா மாணவர்கள் தாக்கப்பட்டது சம்பவம் பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பாஜக
முன்னாள் எம்.பி. தருண் விஜய் அளித்த பேட்டியில், இந்தியர்கள் இனவெறியர்கள்
இல்லை. நாங்கள் இனவெறியர்களாக இருந்தால் எப்படி தென்னிந்திய மக்களுடன்
இணைந்து வாழ முடியும்? இந்தியாவிலும் கறுப்பர்கள் உள்ளனர். எங்களைச்
சுற்றியும் கறுப்பின மக்கள் உள்ளனர் என்று இனவெறியை தூண்டும் வகையில் அவர்
கூறியிருந்தார்.
இதற்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதை தொடர்ந்து
தனது கருத்துக்கு அவர் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் இந்த விவகாரம்
லோக்சபாவிலும் எதிரொலித்தது. இதுகுறித்து எதிர்க்கட்சி குழு தலைவர்
மல்லிகார்ஜுன கார்கே (கர்நாடகாவை சேர்ந்தவர்) பேசுகையில்,
தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் இந்தியர்களா? இல்லையா? என அரசு
விளக்கமளிக்க வேண்டும் என காட்டமாக கூறினார்.
மேலும் தென் மாநிலங்களை பற்றி தவறாக பேசிய தருண் விஜய் மீது நடவடிக்கை
எடுக்கவேண்டும் எனவும் இது போன்ற பேச்சுக்களை அனுமதித்தால் தென்
மாநிலங்கள் தனி நாடாக பிரிந்து செல்ல முற்படும் என்றும் எச்சரிக்கை
விடுத்தார் மல்லிகார்ஜூன கார்கே. கார்கே பேச்சுக்கு எதிர்கட்சிகளின் மற்ற
எம்பிக்களும் ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் அவையில் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.
No comments:
Post a Comment