Latest News

சொந்த வீடு கூட இன்றி வாழ்ந்து மறைந்த வீர மங்கை கோவிந்தம்மாள்! தியாகிகளுக்கு இவ்வளவுதான் மதிப்பா?

 
சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த கோவிந்தம்மாள் நேற்று காலமானார். ஆம்பூரை சேர்ந்த முனிசாமி என்பவரின் மகளாக 1926-ல் கோவிந்தம்மாள் பிறந்தார். அவருக்கு ஒரு வயதானபோது அவரது தந்தை வேலைக்காக மலேசியா சென்றுள்ளார். அங்கு கோலக் கிள்ளான் என்ற ஊரில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றினாராம். பிறகு வேலையை விட்டுவிட்டு நகைக் கடை நடத்தியுள்ளார். கோவிந்தம்மாள் அங்கு 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அங்கு ரப்பர் எஸ்டேட்டில் எழுத்தராக பணிபுரிந்த அருணாச்சலம் என்பவருடன் அவருக்கு திருமணம் நடந்துள்ளது.

மலேசியாவில் மலாக்கா பிராந்தா என்ற இடத்தில் நேதாஜி உரையாற்றியுள்ளார். அதனை கேட்ட அந்த இடத்திலேயே ராணுவ நிதியாக தான் அணிந்திருந்த 6 பவுன் தங்க வளையலைக் கழற்றிக் கொடுத்தாராம். பிறகு திருமணத்தின் போது தாய் வீட்டு சீதனமாக கிடைத்த ஒரு ஏக்கர் ரப்பர் தோட்டத்தையும் ஐ.என்.ஏ.வுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார் கோவிந்தம்மாள். ஐ.என்.ஏ. ராணுவத்தில் பெண்களுக்கென ஜான்சிராணி ரெஜிமெண்ட் ஏற்படுத்தியபோது 1943-ல் அதில் சிப்பாயாக சேர்ந்தார். 1000 பெண்கள் கொண்ட அந்த படையில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு ரக துப்பாக்கிகள் சுடும் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அந்த 100 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றவர் கோவிந்தம்மாள். இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியபோது, ராணுவ முகாமில் இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் கோவிந்தம்மாள் இருந்தபோது மாறுவேடத்தில் நேதாஜி ராணுவ முகாமுக்கு சென்றுள்ளார். ராணுவ முகாமுக்குள் அவர் செல்ல முயன்றபோது அவரை கோவிந்தம்மாள் தடுத்து நிறுத்தி அவரை அனுமதிக்க மறுத்துள்ளார். தான் நேதாஜி எனக் கூறியபோதும் அவரை உள்ளே விட மறுத்துள்ளார். பிறகு நேதாஜி மாறுவேடத்தை கலைத்து தன்னுடைய முகத்தை காட்டிய பிறகு தான் அவரை உள்ளே அனுமதித்துள்ளார். அதனால் நேதாஜியிடம் பாராட்டும் பெற்றுள்ளார் கோவிந்தம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது. 1949-ல் கணவருடன் ஆம்பூருக்கு வந்தார். லாரி டிரைவராக பணியாற்றிய அவரது கணவர் 1960-ல் நடந்த ஒரு விபத்தில் இறந்துள்ளார். பிறகு கோவிந்தமாள் ஒரு பள்ளியில் மதிய உணவு சமைத்தல், மாவு அரைவை மில்லில் வேலை என பல்வேறு வேலைகளை செய்துள்ளார். முதுமை காரணமாக எந்த வேலையும் செய்ய முடியாமல், சொந்த வீடு கூட இல்லாமல் மாநில அரசு வழங்கும் ஓய்வூதியத்தை வாங்கி வாழ்ந்து வந்த கோவிந்தம்மாள் தனது 90வது வயதில் மரணமடைந்தார். இவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.