தமிழகத்தில் பிரபல எழுத்தாளரும், கவிஞரும், முற்போக்கு
சிந்தனைவாதியுமான மக்கள் கவிஞர் இன்குலாப், சென்னையில் உடல் நலக்குறைவால்
வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 73. ராமநாதபுரம் மாவட்டம்
கீழக்கரையை சேர்ந்த இன்குலாப்பின் இயற்பெயர் சாகுல் அமீது.
சென்னை புதுக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய தீவிர தமிழ்
உணர்வாளர். இன்குலாப்பிற்கு கமருன்னிஷா என்ற மனைவியும், செல்வம், இன்குலாப்
என 2 மகன்களும், ஆமினா பர்வீன் என்ற ஒரு மகளும் உள்ளனர்.
இன்குலாப், 'ஆனால்', 'அகிம்சையின் முறையீடுகளை எந்த ஆதிக்கக்காரனும்
செவிமடுப்பதில்லை', 'இன்குலாப் நாடகங்கள்', 'காந்தள் நாட்கள்', 'மானுட
குரல்', 'குரல்கள்' உள்பட பல புத்தகங்களை எழுதி உள்ளார்.
மனுசங்கடா... நாங்களும் மனுசங்கடா... என்ற இவரது மனிதத்துவமிக்க பாடல்
தலித் விடுதலையை குறித்தது. இவர் அம்பேத்கர் சுடர் விருது' உள்பட பல்வேறு
விருதுகளை பெற்று உள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு முதல் சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கம் ஐயஞ்சேரி மதுரை
மீனாட்சி நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
கடந்த 10 நாட்களாக கவிஞர் இன்குலாப்புக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்த
நிலையில் வியாழக்கிழமையன்று அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் அவர்
மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கவிஞர் இன்குலாப்பின் உடல் ஊரப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு
வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அங்கு ஏராளமானவர்கள் அவரது
உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கவிஞர் இன்குலாப் தன்னுடைய மரணத்துக்கு பிறகு மருத்துவ கல்லூரி மாணவர்கள்
ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் தனது உடலை அரசு மருத்துவ கல்லூரிக்கு
தானமாக வழங்க வேண்டும் என கூறி இருந்தார். அதன்படி இன்று மக்கள் கவிஞர்
இன்குலாப்பின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்
ஒப்படைக்கப்பட்டது. இன்குலாப்பின் மூத்த மகன் செல்வம் கண்ணீர் மல்க தனது
தந்தையின் உடலை ஒப்படைத்தார்.
உடல் தானம், உடல் உறுப்புக்கள்தானம் இஸ்லாத்தில் அனுமதி இல்லை ரத்த தானம் மட்டும் அனுமதி உண்டு
ReplyDeleteAbdul waheed