தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி, விவசாயம், மற்றும் கூட்டுறவுத்துறை
அமைச்சராக பதவி வகித்தவர் கோ.சி.மணி. தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான
இவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் ஆவார்.
கோ.சி.மணிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கும்பகோணத்தில் உள்ள ஒரு
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று இரவு சுமார் 9.10 மணி அளவில் மருத்துவமனையில் அவருக்கு திடீரென
மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிகிச்சை பலனின்றி கோ.சி.மணி மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது 88.
கோ.சி மணியின் உடல் தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் உள்ள அவரது வீட்டுக்கு
உடனடியாக எடுத்து செல்லப்பட்டது. அவரது உடலுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள்
அன்பழகன், கோவி.செழியன், மாவட்ட செயலாளர்கள் கல்யாணசுந்தரம், குத்தாலம்
கல்யாணம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமலிங்கம் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள்
அஞ்சலி செலுத்தினர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் ஆடுதுறைக்கு நேரில்
வந்து மணியின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். கோ.சி.மணி
இறுதிசடங்கு நடைபெறுவதையொட்டி குத்தாலத்தில் இன்று கடைகள்
அடைக்கப்பட்டுள்ளது.
கனிமொழி இரங்கல்
திமுக எம்.பி. கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் இரங்கல் செய்தியை
பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், ஒரு கழகத் தொண்டர்- கழக முன்னணித்
தலைவர் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு உதாரணமாய், விசுவாசத்தின்
மறு பிறப்பாய், குறிப்பாக என்னைப் பொறுத்தவரையில், என் தந்தைக்கு நிகராய்
பாசங்காட்டிய மாமா கோ.சி. மணியை இழந்து விட்டேன்.
சிறு வயதில் அவரது கிராமத்து வீட்டில் கழித்த நாட்கள் என்றும் மறக்க
முடியாதவை. சென்னையிலேயே வளர்ந்த என்னை நான் ஆசைப்பட்டேன் என்று மாட்டு
வண்டியில் தன் அருகில் வைத்துக் கொண்டு அழைத்துச் சென்றார்.
உடல் நலம் இல்லாத நேரத்தில் கூட இருவர் கைத்தாங்கலாக பிடித்துக்கொள்ள தன்
தலைவரைக் காண ஓடோடி வருவார். அப்போது தலைவர் "ஏன் இந்த உடம்பை வைத்துக்
கொண்டு இப்படி அலைகிறாய்" என்று கடிந்து கொள்வார். அந்த அன்பு இன்று
இல்லாமல் போய்விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment