கர்நாடகாவில், அரசு அதிகாரிகளான, காவேரி பாசன நிறுவனத்தின் மேலாண்
இயக்குனர் சிக்கராயப்பா மற்றும் கர்நாடக மாநில நெடுஞ்சாலைத் துறை தலைமை
திட்ட அதிகாரி ஜெயச்சந்திரா ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும்
அவர்களது உறவினர்களின் வீடுகளில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது, 152 கோடி ரூபாய் அளவிற்கு, கணக்கில் வராத ரொக்கப் பணம், தங்க
நகைகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதைத் தொடர்ந்து,
இரு அதிகாரிகளையும், கர்நாடக அரசு, நேற்று, சஸ்பெண்ட் செய்தது.
இவ்வளவு பணமும், நகைகளும் உண்மையிலேயே அதிகாரிகளுக்கு சொந்தமானதா அல்லது
அரசியல்வாதிகளுக்கு சொந்தமானதை அந்த அதிகாரிகள் பாதுகாப்பாக பதுக்கி
வைத்திருந்தார்களா என்பது குறித்து, பாஜக உள்ளிட்ட கர்நாடக எதிர்க்கட்சிகள்
சட்டசபையில் புயலை கிளப்பியுள்ளன.
தமிழகத்தில் சோதனை
இந்நிலையில், ரூ.152 கோடி பறிமுதல் செய்தது தொடர்பாக, தமிழகத்தில் சென்னை,
ஈரோடு உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளது பலரது
புருவங்களையும் உயர்த்தியுள்ளது. இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, வருமான வரி புலனாய்வு பிரிவு டைரக்டர் ஜெனரல்
பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். கர்நாடக அரசு அதிகாரிகளிடம் சிக்கிய
பணத்திற்கும், தமிழகத்தில் நடந்த சோதனைக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி
எழுந்துள்ளது.
தமிழக கட்டுமான நிறுவனம்
அதற்கான விடை இதுதான்: கர்நாடகாவில், நீர் பாசனம் மற்றும் நெடுஞ்சாலைத்
துறை அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தபோது, அத்துறைகள்
தொடர்பான பல் வேறு கட்டுமானப் பணிகளில், ஈரோட்டில் இயங்கும், ராமலிங்கம்
என்பவருக்கு சொந்தமான, ராமலிங்கா கன்ஸ்ட்ரக் ஷன் என்ற நிறுவனம் ஈடுபட்டு
வந்தது தெரியவந்தது. அதனால், ஈரோட்டில் உள்ள அதன் தலைமை அலுவலகத்திலும்,
சென்னை, தி.நகர், விஜயராகவா சாலையில் உள்ள கிளை அலுவலகத்திலும், சோதனை
நடத்தப்பட்டுள்ளது. அப்போது, இந்த வழக்குக்குத் தேவையான முக்கிய ஆவணங்கள்
சிக்கியுள்ளன.
புது நோட்டுக்கள்
கர்நாடகாவில் நடந்த சோதனைகளில், ஆறு கோடி ரூபாய் ரொக்கம், 7 கிலோ தங்கக்
கட்டி, 9 கிலோ தங்க நகைகள், இரண்டு சொகுசு கார்கள் உள்ளிட்ட,152 கோடி
ரூபாய் மதிப்புள்ள பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், ஆறு கோடி
ரூபாய் பணம் முழுவதும், புதிய, 2,000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. மக்கள்
வங்கிகளில் நீண்ட கியூவில் பணத்துக்காக நிற்கும்போது, 6 கோடி ரூபாய்
முழுக்க புதிய 2000 நோட்டுக்களாக இருந்தது எப்படி என்ற சந்தேகம் அனைத்து
தரப்பிலும் எழுந்தது.
ஈரோடு வங்கிகள் உடந்தை
இதற்கு காரணம் ஈரோட்டில் உள்ள 3 தனியார் வங்கிகளில் இருந்து புதிய ரூபாய்
நோட்டுகள் மாற்றப்பட்டதும், இதற்கு வங்கி மேலாளர்கள் உடந்தையாக
இருந்துள்ளதும் என்பதும் தெரியவந்துள்ளது. மக்களுக்கு கொடுக்க மத்திய அரசு
அனுப்பிய புதிய ரூபாய் தாள்களை கருப்பு பண பதுக்கல்காரர்களுக்கு இந்த வங்கி
மேலாளர்கள் வழங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது. இதுபோன்ற பேங்க்
மேனேஜர்கள்-கருப்பு பண முதலைகள் கூட்டணியால்தான் நாட்டில் பணத்திற்கு
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதும் இதிலிருந்து தெரியவருகிறது.
அமைச்சர் உறவினர்
ஈரோடு வங்கியில் யார் இந்த பணத்தை மாற்றி, அதை கர்நாடகாவிற்கு
அனுப்பியிருப்பார்கள் என ஐடி துறை விசாரணை நடத்தியபோதுதான் ராமலிங்கத்தின்
பின்னணி குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
ராமலிங்கத்தின் இளைய மகனுக்கும் பெருந்துறையை சேர்ந்த தொழிலதிபர்
சுப்பிரமணியம் என்பவரது இளைய மகளுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
தொழிலதிபர் சுப்பிரமணியத்தின் மூத்த மகள் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக
உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் மகனுக்கு திருமணம் செய்து
கொடுக்கப்பட்டுள்ளார். அதன்படி அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும்,
ராமலிங்கமும் உறவுக்காரர்களாக மாறினார்கள்.
தமிழக பணமா?
அமைச்சரின் உறவினர் ஆனதாலோ என்னவோ, தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுமான
பணிகள் எளிதில் ராமலிங்கத்திற்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. எனவே,
ராமலிங்கம் மூலமாக தமிழக அதிகார மட்டத்திலுள்ள சிலருடைய பணம்தான் கர்நாடக
அரசு அதிகாரிகளிடம் பாதுகாப்பாக வைத்தரிக்கப்பட வேண்டும் என்ற சந்தேகம்
ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment