கட்டாய திருமணத்திற்காக ஆசிரியை கடத்தப்பட்ட போது காரில் இருந்து
குதித்து தப்பியதால் தூத்துக்குடி அருகே பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே வடக்கு காலாங்கரையை சேர்ந்தவர்
ஐயப்பன். கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவரது மனைவி சர்மிளா.
இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. சர்மிளாவின் அக்கா சியமளா. இவர்
திருமணமாகி விவகாரத்து பெற்று கூட்டபுளியில் உள்ள தனியார் பள்ளியில்
ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
சியமளாவை இரண்டாவது திருமணம் செய்ய ஐயப்பன் விரும்பினார். ஆனால்
இதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் அவர் பள்ளி முடிந்து வீடு
திரும்புவதற்காக பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது காரில் வந்த ஐயப்பன் மற்றும் சிலர் அவரை வலுகட்டாயமாக காரில்
கடத்தி சென்றனர். அப்போது வந்த வழியாக பைக்கில் வந்த சியமளாவின் உறவினர்
காரை விரட்டி சென்றார். ஆனால் பைக்கில் பெட்ரோல் இல்லாததால் அவர்கள்
உடனடியாக சியமளாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சியமளாவின் தாய் ஜான்சிராணி புதுக்கோட்டை காவல் நிலையத்தில்
புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, சப் இன்ஸ்பெக்டர் சண்முகம்
மற்றும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதற்கிடையே சியமளாவை கடத்தி கார்
கோவில்பட்டி அருகே உள்ள திருவேங்கடம் வந்தது.
அங்குள்ள வேகத்தடையில் கார் மெதுவாக சென்ற போது சியமளா கார் கதவை திறந்து
குதித்து தப்பினார். அங்கு சிவகாசி செல்வதற்காக நின்ற பஸ்சில் ஏறினார்.
இதையடுத்து காரில் இருந்து இறங்கிய ஐயப்பன் பஸ்சில் ஏறி சியமளாவின் கையை
பிடித்து இழுத்துள்ளார். அவர் சத்தம் போடவே பஸ்சில் இருந்த பெண் காவலர்
அன்புசெல்வி அவரிடம் விசாரணை நடத்தினார். ஐயப்பன் சரியான பதில்
சொல்லாததால் அவரை பொதுமக்கள் உதவியுடன் திருவேங்கடம் காவல் நிலையம்
அழைத்து சென்றார். இதையடுத்து காரில் இருந்த 5 பேர் தப்பி விட்டனர். அங்கு
அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment