தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் சி.வித்தியாசகர் ராவ் சமீபத்தில்
பிறப்பித்திருக்கும் ஒரு உத்தரவு கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களுக்கும்
ஆளுநர் பிறப்பித்திருக்கும் ஒரு உத்திரவுதான் பிரச்சனையை
கிளப்பியிருக்கிறது. இனிமேல் அனைத்து பல்கலைக் கழகங்களும் தங்களுடைய பணப்
பரிவர்த்தனைகளை மின்னணு பரிமாற்றங்கள் மற்றும் மின்னணு பண கொடுக்கல்
வாங்கல் (electronic transfers & e-payments) மூலம்தான் மேற்கொள்ள
வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. பல்கலைக் கழகங்களின் தினசரி
நடவடிக்கைகள் மட்டுமின்றி, பல்கலைக் கழகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும்
கல்லுரிகளும் கூட இனிமேல் இந்த முறையைத் தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று
ஆளுநர் தன்னுடையை உத்தரவில் தெரிவித்திருக்கிறார்.
இந்த உத்தரவின் சாதக, பாதக அம்சங்கள் என்ன என்பதல்ல தற்போதைய கேள்வி.
இவ்வாறு ஒரு உத்தரவு பிறப்பிக்க ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது
என்பதுதான் விவாதப் பொருளாகக் கிளம்பியிருக்கிறது. தமிழகத்தில் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கும் பொழுது மத்திய அரசின் ஏஜெண்டான
ஆளுநர் எந்த அதிகாரத்தின் கீழ் இவ்வாறு ஒரு உத்தரவு பிறப்பிக்க முடியும்
என்பதுதான் கேள்வி.
அரசியல் கட்சிகள் ஏற்கனவே ஆளுநரின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சிக்க
துவங்கியிருக்கின்றன.
"தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம்
இருக்கும் பொழுது இப்படிப்பட்ட ஒரு உத்தரவைப் பிறப்பிக்க ஆளுநருக்கு எந்த
அதிகாரமும் கிடையாது. இது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. நேரடியாக
மாநில அரசின் அதிகார வரம்பில் தலையிடுவதாகும். இதனை நாங்கள் வன்மையாக
கண்டிக்கிறோம்,'' என்று கூறுகிறார் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
ஈவிகேஎஸ் இளங்கோவன்.
இதே கருத்தை வலியுறுத்துகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்
திருமாவளவன்.
"ஆளுநர் பட்டமளிப்பு விழாக்களுக்குத் தலைமை தாங்கலாம். துணை வேந்தர்களோடு
கலந்தாலோசித்து சில நியமனங்களை மேற்கொள்ளலாம். ஆனால் இது போன்ற உத்தரவுகளை
பிறப்பிப்பதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மாநில அரசின் அதிகார
எல்லைக்குள் ஆளுநர் தலையிடும் இது போன்ற காரியங்கள் கூட்டாட்சி
தத்துவத்திற்கே உலை வைப்பதாக ஆகி விடும்,'' என்கிறார் திருமாவளவன்.
கல்வியாளர்களும் இதே கருத்தை வலியுறுத்துகின்றனர். "ஆளுநருக்கு இது
போன்று உத்திரவுகளை பல்கலைக் கழகங்களுக்கு பிறப்பிப்பதற்கான அதிகாரங்கள்
இல்லை. இரண்டு பணிகள்தான் ஆளுநருக்கு இருக்கின்றன. ஒன்று துணை வேந்தர்களை
தேர்ந்தெடுப்பதற்கான பணி. அதாவது தன்னிடம் வரும் பேனலில் இருந்து ஒருவரை
தேர்ந்தெடுப்பது. இரண்டாவது பட்டமளிப்பு விழாக்களுக்கு தலைமை தாங்குவது.
அவ்வளவுதான்,'' என்கிறார் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை
வேந்தர் டாக்டர் மு. அனந்தகிருஷ்ணன்.
இதே கருத்தையே மற்ற கல்வியாளர்களும் வலியுறுத்துகின்றனர். "பல்கலைக்
கழகங்களின் வேந்தர் தான் ஆளுநர். இது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்
ஏற்படுத்தப்பட்ட ஒரு அலங்காரப் பதவி. சமீபத்தில் ஹைதராபாத் பல்கலைக் கழக
மாணவர் ரோஹித் வெமுலா விவகாரத்தில் எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது. அந்த
சம்பவம் பற்றி அந்த பல்கலைக் கழகத்தின் வேந்தரான டாக்டர் சி ரங்கராஜனுக்கு
நான் கடிதம் எழுதியிருந்தேன். அவருடைய தலையீட்டை கோரியிருந்தேன். அதற்கு
அவர் எனக்கு எழுதிய பதிலில். துணை வேந்தர்களை தேர்ந்தெடுப்பது மற்றும்
பட்டமளிப்பு விழாக்களை நடத்துவது மட்டுமே வேந்தரின் பணி என்றும், அதற்கு
மேல் தனக்கு அதிகாரம் ஏதுமில்லை என்றும் எனக்கு கடிதம் எழுதியிருந்தார்,''
என்று ஒன் இந்தியாவிடம் கூறினார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. "ஒரு
ஆளுநர் என்பவர் சம்மந்தப்பட்ட மாநில அரசின் அமைச்சரவையின் ஆலோசனை மற்றும்
சிபாரிசின் பேரில் தான் முடிவுகளை எடுக்க முடியும். தன்னிச்சையாக எடுக்க
முடியாது. அப்படியென்றால் தமிழகத்தில் நடப்பது தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு
முதலமைச்சரின் ஆட்சியா அல்லது மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரின்
ஆட்சியா?'' என்று மேலும் கேட்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
செப்டம்பர் 22 ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ
மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த பின்னர் தமிழகத்தில்
ஏற்பட்டிருக்கும் அசாதரணாமான அரசியல் சூழ்நிலையின் வெளிப்பாடாகத்தான் இந்த
அவலத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது. முக்கியமான விஷயங்களில் தமிழக அரசின்
கருத்து என்னவென்றே தெரியவில்லை. உதாரணத்துக்கு ரூபாய் நோட்டுக்கள்
செல்லாதென்ற மோடியின் அறிவிப்பை எடுத்துக் கொள்ளலாம். 500, 1,000 ரூபாய்
நோட்டுக்கள் செல்லாதென்ற மோடியின் அறிவிப்பால் பாதிக்கப்பட்ட ஒவ்வோர்
மாநிலமும் தங்களுக்கென்று பிரத்தியேகமான நிவாரணத்தை மத்திய அரசிடம்
வைத்திருக்கின்றன. கேரளா கூட்டுறவு வங்கிகள் பாதிக்கப் பட்டிருப்பதை
எதிர்த்து நேரடியாக உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. ஆந்திர முதலமைச்சர்
சந்திரபாபு நாயுடு 10,000 கோடி ரூபாய் சிறிய ரூபாய் நோட்டுக்களாக -
10,50,100 - தங்களது மாநிலத்துக்கு வேண்டுமென்று மோடியிடம் மன்றாடிக்
கொண்டிருக்கிறார். வட கிழக்கு மாநில முதலமைச்சர்களும் 500, 1,000 ரூபாய்
நோட்டுக்களுக்கான பயன்பாட்டை இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்
என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் தமிழ் நாட்டிலிருந்து அதுபோன்று எந்தவோர் கோரிக்கையும் மாநில அரசிடம்
இருந்து, வர வேண்டிய அளவுக்கு வரவில்லை. ஜெயலலிதா உடல் நலத்துடன்
இருந்திருந்தால் இது போன்று நடந்திருக்குமா, மாநில அரசு மெளனம்
காத்திருக்குமா என்று தெரியவில்லை. எந்தவோர் மாநில அரசும் திறம்பட பணி
புரிய தனி மெஜாரிட்டியும், நிர்வாகத் திறன் மிக்க முதலமைச்சரும் இருந்தால்
மட்டும் போதாது. அந்த மாநிலத்தை வழி நடத்த சிறப்பான, திறன் மிகு அரசியல்
தலைமை வேண்டும். அது தற்போது தமிழகத்தில் இல்லாமல் இருப்பதுதான் மாநில
ஆளுநர் இது போன்று தன்னுடைய அதிகார வரம்பை மீறி செயற்படுவதற்கு வழி
வகுத்துக் கொண்டிருக்கிறது.
நாடு விடுதலை பெற்ற இந்த 69 ஆண்டுகளில் ஒவ்வோர் மாநிலத்திலும்
ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை இம்சிப்பதற்கென்றேதான்
ஆளுநர்கள் மத்திய அரசால் நியமிக்கப்பட்டனர். இதில் பிரதமர் இந்திரா காந்தி
செய்த 'அரும் பணிகள்' வரலாற்று சிறப்பு மிக்கவை. 1984 ல் ராம்லால் என்ற ஒரு
ஆளுநரை வைத்து என்டி ராமராவ் அரசை கலைத்த போது இந்த விஷயம் விஸ்வரூபம்
எடுத்தது. 2004 - 2014 ல் குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்து போது
அவருக்கு அனு தினமும் குடைச்சல் கொடுப்பதற்காகவே கமலா பேனிவால் என்பவரை
மத்திய காங்கிரஸ் அரசு நியமித்தது. இதற்கு சற்றும் சளைக்காமல் பாஜக வும்
நடந்து கொண்டது. 1999 - 2004 வாஜ்பாய் ஆட்சிக் கால்த்தில் சுந்தர் சிங்
பண்டாரி என்ற ஆளுநர் பிஹாரில் வரம்பு மீறி நடந்து கொண்டார். ஒரு கட்டத்தில்
பாஜக வுக்கே அது தலைவலியாய் போய், "விரைவில் நீங்கள் அரசியல் தன்மையற்ற
ஒரு ஆளுநரை (apolitical Govenor) சந்திப்பீர்கள்," என்று அப்போதய உள்துறை
அமைச்சர் எல்.கே. அத்வானியே கூறினார். மோடி ஆட்சியில் உத்திராகண்ட்,
அருணாச்சல பிரதேசம், போன்ற மாநிலங்களில் ஆளுநர்களின் செயற்பாடுகள் கடுமையான
விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கின்றன.
அரசியல் தலைமை அறவே இல்லாமல் 'தலையறுந்த கோழியாய்' (headless chicken)
தடுமாறிக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டு அரசு நிர்வாகத்தில் ஆளுநர் மூலமாக
மோடி அரசு தன்னுடைய 'திருப்பணியைத்' துவங்கி விட்டது என்றுதான்
தோன்றுகிறது.
No comments:
Post a Comment