Latest News

திருச்சி அருகே வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிவிபத்து: 18 தொழிலாளர்கள் பலி; 8 பேர் படுகாயம்


திருச்சி அருகே வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 18 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

வெடிமருந்து தொழிற்சாலை
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா உப்பிலியபுரம் அருகே உள்ளது டி.முருங்கப்பட்டி கிராமம். இந்த கிராமம் பச்சைமலை அடிவாரத்தில் அமைந்து உள்ளது. இந்த ஊரின் எல்லையில் “வெற்றிவேல் எக்ஸ்புளோசிவ் பிரைவேட் லிமிடெட்” என்ற பெயரில் தனியார் வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 3 ‘ஷிப்டு’களாக சுமார் 300 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் டி. முருங்கப்பட்டி, கொப்பம்பட்டி, செங்கட்டு, நாகநல்லூர், பாதர்பேட்டை ஆகிய சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள்.

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி
160 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள இந்த தொழிற்சாலையில் கல்குவாரிகளில் உள்ள ராட்சத பாறைகள், கல்குன்றுகளை உடைப்பதற்கான வெடிமருந்துகள் மற்றும் அதற்கான திரிகள் (கேபிள்கள்) ஆகியவை தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் வெடிமருந்துகள் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்தோனேஷியா நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த தொழிற்சாலையில், பி.இ.டி.என். என்று அழைக்கப்படும் பிரிவில் நேற்று காலை நைட்ரிக் ஆசிட்டுடன் பி.இ. பவுடர் கலந்து வெடிமருந்துகளை தயாரிக்கும் பணி நடந்து கொண்டு இருந்தது. இந்த பணி நடைபெற்ற கட்டிடம் தரைத்தளம் மற்றும் முதல் மாடியை கொண்டது.

பயங்கர வெடி விபத்து
பணி நடந்து கொண்டிருந்த போது, வெடிமருந்து கலவையை அடுத்த பிரிவுக்கு கொண்டு செல்வதற்காக காலை 7.20 மணி அளவில் 17 தொழிலாளர்கள் ஒரு சரக்கு ஆட்டோவில் உள்ளே வந்தனர். அப்போது அந்த பிரிவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் தீப்பற்றிக்கொண்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இந்த வெடிவிபத்தில் அந்த கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. அருகில் உள்ள கட்டிடங்களும் சேதம் அடைந்தன. வெடி சத்தம் பல கிலோ மீட்டர் தூரம் கேட்டது.

18 தொழிலாளர்கள் பலி
இந்த பயங்கர சத்தத்தை கேட்டதும் அருகில் உள்ள கிராம மக்கள் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டது என்ற பதைபதைப்பில் தொழிற்சாலையை நோக்கி ஓடோடி வந்தனர். தங்கள் உறவினர்கள் விபத்தில் சிக்கி பலியாகி இருக்கலாம் என்ற பதற்றத்தில் தொழிற்சாலையை முற்றுகையிட்டனர். ஆனால் அவர்களை அங்கிருந்தவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். திருச்சி கலெக்டர் பழனிசாமி, மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.வரதராஜூலு, திருச்சி சரக டி.ஐ.ஜி.அருண், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். தீயணைப்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டன.

நெஞ்சை பதற வைக்கும் இந்த கோர விபத்தில் 18 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி ஆனார்கள். உடல்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. கை, கால்கள் தனித்தனியாக கிடந்தன. உடல்களில் இருந்த உடைகள் எரிந்து காணப்பட்டன.

8 பேர் படுகாயம்
இந்த விபத்தில் மேலும் 8 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெடிமருந்து கலவையை தயாரித்த போது தவறான அணுகுமுறையால் அழுத்தம் ஏற்பட்டு அதன் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் முதல்கட்டமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வெடிமருந்து நிபுணர்கள், வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயல் இழக்க செய்யும் போலீஸ் பிரிவினரும் வெடிமருந்து தொழிற்சாலைக்கு வந்து முகாமிட்டு உள்ளனர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

கலெக்டர் பேட்டி

இந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த வெடிவிபத்து சம்பவத்தின் போது பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் எண்ணிக்கையை வருகைப்பதிவேடு மூலம் சரிபார்த்து வருகிறோம். வெடி விபத்துக்கான காரணம் பற்றி தொழிலாளர் பாதுகாப்பு துறை மற்றும் வெடிமருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த தொழிற்சாலை மத்திய அரசின் அனுமதி பெற்று இயங்கி வந்து உள்ளது. அதற்கான சான்றிதழை அதன் நிர்வாகத்தினர் பெற்று உள்ளனர். இந்த தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டது. தொழிற்சாலையை மூட வேண்டும் என கிராம மக்கள் மனு எதுவும் கொடுக்கவில்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.