உங்க ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் ஒழிப்பு திட்டம், ஸாரி... கருப்புப்
பண ஒழிப்புத் திட்டத்தை எதிர்க்கிறவங்களை உங்க ஆளுக அப்படித்தான்
சொல்றாங்க... நான் தேச விரோதியாவோ அல்லது தேச துரோகியாவோ இருந்துட்டு
போய்டறேனுங்க...
தப்புத்தான்... நாடு முழுக்க இதுவரைக்கும் 44 உயிர்களுக்கும் மேல
போயிருக்குங்க. ரெண்டு குழந்தைக ஹாஸ்பிடல் போகக்கூட முடியாம செத்துப்
போயிருக்குங்க. மக்கள் சில்லறை கிடைக்காம திண்டாடுறாங்க... இதையெல்லாம்
சொன்னா தேச நலனுக்காக பொறுத்துக்கக் கூடாதா? நம்ம நாட்டுக்கு பிடிச்ச
சனியனான கருப்பு பணம் ஒழிக்க இதை கூட செய்ய மாட்டீங்களா? காஷ்மீர்
பார்டர்ல...னு ஆரம்பிச்சு ஆளாளுக்கு லெக்சர் எடுக்குறாங்க...
ஐயா எங்களோட வாதம் நாங்க கஷ்டப்படறோம்னு மட்டும் இல்லீங்க... இந்த
நாட்டுக்காக எங்களை என்ன வேணா பண்ணிக்குங்க... நடுத்தெருவுல நிக்க வெச்சு
சுட்டுக் கூட கொல்லுங்க... நாட்டுக்காகன்னா உயிரை கொடுக்க கூட தயாரா
இருக்கோம். உங்க அளவுக்கு இல்லைனாலும் கூட ஓரளவுக்கு தேசப்பற்று
இருக்குங்க... ஆனா இப்ப விஷயம் அது இல்லீங்க...
நீங்க சொல்றீங்கள்ல கருப்பு பணம் ஒழிஞ்சுடும்னு.. அது உண்மையிலேயே
ஒழிஞ்சுடுமா? ஒளிஞ்சுடுமா?கறதுதான் பிரச்னை. நீங்க சொன்ன யோசனை
கரெக்டுங்க... அதை செயல்படுத்துற விதம் ரொம்ப்ப்ப தப்புங்க...
முதல் விஷயம்ங்க... நீங்க பெரிய மதிப்பு நோட்டுகளை ஒழிச்சு அதை விடப் பெரிய
மதிப்பு நோட்டுகளை கொண்டு வந்தது. இதன் மூலமா இனிமே ஈஸியா கருப்பு பணம்
பதுக்கலாம். பெட்டிகள் குறையும். அடேய் படவா... நாங்க தான் கருப்பு பணத்தை
ஒழிச்சுட்டேனேன்னு சொல்றீங்களா? சிரிப்பு காட்டாதீங்க... மூலைக்கு மூலை
கமிஷனுக்கு பணம் மாற்றித் தர ஏஜெண்ட்கள் முளைச்சுட்டாங்க... அதிகபட்சம்
நாப்பது பெர்செண்டுங்க... இருக்கற அம்புட்டு ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய்
தாளுங்களை வாங்கிட்டு மாற்றித் தர்றாங்க... ஸோ நீங்க ஏழைகளுக்கு போய்
சேரும்னு நினைச்ச நோட்டுகள்லாம் திரும்ப கருப்பு பண ஆசாமிககிட்டயே ஈஸியா
போய் சேருது. அதாவது முடங்குது. அப்ப ஆட்டோமேடிக்கா சில்லறை தட்டுப்பாடு
வரும்ல? அதுதான் இது.
புழக்கத்துல இருக்கற பணத்தில 85 சதவீதம் செல்லாதுனு சொல்லும்போது
அதுக்கு தகுந்த மாற்று ஏற்பாடுகள் பண்ணியிருக்கணும்ல?
இன்னிக்கு ஜட்ஜ்களையே நம்ப முடியலை. பேங்க் மேனஜர்களை எப்படிங்க நம்ப
முடியும்? லோக்கல் பெரிய புள்ளிக்கிட்டயே பேங்க் மேனஜர்கள் எப்படி
வழிவாங்கன்னு பேங்குக்கு போறவங்களுக்கு தெரியும். பணக்காரன்னா வீட்டுக்கே
போய் சேவகம் செய்ய தயாரா இருக்கற பேங்க் மேனஜர்கள் இருக்கற நாடு இது.
அவங்கள்ல சில பேரு பின்பக்கம் வழியா மொத்தமா மாத்தி தர்றாங்க... ஹாஸ்பிடல்,
பெட்ரோல் பங்க், மெடிக்கல்னு நீங்க லிஸ்ட் போட்ட இடங்கள்லலாம் கொடுக்கறது
எல்லாமே வெள்ளைப் பணம்னு எப்படிங்க அடிச்சு சொல்வீங்க... பின்வழில
மாற்றப்பட்டு வந்த கருப்பு பணமாக் கூட இருக்கலாம்ல? அதாவது இந்த ஒரு வாரமா
சில்லறை இல்லை, சில்லறை இல்லைனு சொல்லியோ, ஐநூறு, ஆயிரம்னா ஃபுல்லா
போட்டுக்க, மீதி கொடுக்க முடியாதுனு சொல்லியோ மத்த நோட்டுகளை வசூல்
பண்ணிட்டு அதை அவங்களே மாத்திக்கொடுக்குறாங்க... இங்கே எல்லாமே
கமிஷன்தாங்க.
அதுமட்டுமா... ரெண்டாயிரம் ரூவா தாள் வெளியாகும் முன்பே பணக்காரங்க வீடுகளை
அலங்கரிக்கத் தொடங்கிருச்சின்னு உங்களுக்கே தெரியுமே. ஒரு சாமானியனுக்கு
2000 ரூபா புது நோட்டு கெடக்கிறதே கஷ்டம்ங்கற சூழல்ல, அங்கங்க
லட்சக்கணக்குல 2000 ரூவா நோட்டுக் கட்டு சிக்குது... அது எப்படின்னுதான்
தெரியல.. புரியல.
நீங்களே இப்ப எல்லாரும் டிஜிட்டல் மணி யூஸ் பண்ணுங்கன்னு படிக்காத
குப்பன், சுப்பன் எல்லாரையும் உள்ளே இழுக்குறீங்க... கருப்பு பணம்
வெச்சிருந்தவங்க பணத்தை பண்டல் பண்டலா ஜெய்ஷங்கர் படம் மாதிரி அடுக்கி
வெச்சிருப்பாங்கன்னு என்ன நிச்சயம்?
இதெல்லாம் நடக்கவே இல்லைனு உங்களால சொல்ல முடியாதுங்க... இதையெல்லாம்
தடுக்காம, இதுக்கெல்லாம் சரியான வழிவகை பண்ணாம இப்படியே விட்டாக்கா இன்னும்
சில நாட்கள்ல இருக்கற மத்த ரூபாய் நோட்டுகளும் கருப்பு பணமா பதுக்கப்பட்டு
மக்களுக்கு பணம் கிடைக்காம சிரமமாகிடும். இப்பவே அப்படிதாங்க இருக்கு.
பணம் எடுக்க வர்றவனுக்கு விரல்ல மை வைக்கிறதுனு ஹைதர் காலத்து டெக்னிக்கை
பயன்படுத்துறீங்க... ஏங்க ஆதார் நம்பரை மட்டுமே கொடுத்து சிம்மு வாங்க
முடியுதுன்னா, அவங்களால ஆதார் டேட்டாவை கிராஸ் செக் பண்ண முடியுதுனுதானே
அர்த்தம். நம்ம கவர்ன்மெண்டால முடியாதா?
இப்பவே சில பேங்க்ல பத்து ரூபாய் சில்லறை காசா கொடுக்க
ஆரம்பிச்சுட்டாங்க... ஸோ சில்லறையெல்லாம் காலியாகிட்டே வருது. உண்மையிலேயே
பொது மக்கள்கிறவன் இந்த ஒரு வாரத்துல அதிகபட்சம் இருபதாயிரம்
மாத்தியிருப்பான் இல்லை எடுத்துருப்பான். ஏன்னா அவன் வெச்சிருந்த
கையிருப்பே அவ்வளவ தான் இருக்கும். மத்த பணம்லாம் திரும்ப கருப்பு
பணமாத்தான் போய்கிட்டு இருக்கு. அதாவது பதுக்கப்படுது. இன்னொரு பக்கம்
அரசுக்கும் பொதுமக்களுக்கும் பணம் தட்டுப்பாடு ஏற்படுது.
ஆரம்பத்துல ரெண்டு நாள்ல சரியாகிடும்னு சொன்னீங்க... அப்புறம் ஒரு
வாரம்னு சொன்னீங்க... இதோ போக போக நிலைமை மோசமாத்தான் ஆகுது. இப்ப ஐம்பது
நாள் ஆகும்குறீங்க... இன்னும் பத்து நாள்ல எல்லா மாசக்கடைசி வருது. அப்ப
சம்பளம் போடறதுக்குனு கணிசமா ஒரு தொகை தேவைப்படும். வெளில நீங்க விடற
பணத்தையெல்லாம் பதுக்கிக்கிட்டே இருந்தாங்கன்னா எப்படி பணப்புழக்கம்
இருக்கும்?
கையில மை, காய்ன், டெய்லி லிமிட் நாலாயிரத்துலேர்ந்து ரெண்டாயிரமா
குறைப்புனு மக்களுக்கு பீதியை உண்டு பண்றீங்க. இதனால குழப்பங்களும் பயமும்
தான் கிளம்பும்.
இந்த மை வைக்கிற ஐடியா கொடுக்கறவங்கள்லாம் விட்டுட்டு நல்ல பொருளாதார
ஆட்களா பார்த்து யோசனை கேட்டு தகுந்த நடவடிக்கை எடுப்பீங்கன்னு நம்புறேன்.
என் நம்பிக்கையில மண்ணை அள்ளிப்போட்டுட்டு ஏதாவது வெளிநாடு
கிளம்பிடாதீங்க...!
-க ராஜீவ்காந்தி


No comments:
Post a Comment