இன்று காலை வழக்கம் போல் 3வது நாளாக நாடாளுமன்றத்தின் குளிர்காலக்
கூட்டத் தொடர் தொடங்கியது. தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் ரூபாய்
நோட்டுக்கள் செல்லாது விவகாரம் தொடர்பாக இருக்கையில் இருந்து எழுந்து
கேள்வி எழுப்பினார்கள். இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் லோக் சபா
திங்கள் கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ம் தேதியில்
இருந்து 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை
அடுத்து நாடு முழுவதும் ஒரு நெருக்கடி நிலை போல மக்கள் அல்லல்பட்டு
வருகின்றனர். இதனை காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்
கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்தத் சூழலில் நாடாளுமன்றத்தின் குளிர்
காலக் கூட்டத் தொடர் 16ம் தேதி தொடங்கியது.
கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற பெயரில் பொதுமக்களுக்கு பெரிய
அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பு குறித்து விவாதிக்க
வேண்டும் என்று கோரி லோக் சபாவில் எதிர்கட்சிகள் கோஷம் எழுப்பினார்கள்.
ஆனால், இதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்காததால் லோக் சபா எம்பிகள் தொடர்ந்து
அமளியில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டு பல முறை
லோக் சபா ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், 3வது நாளாக இன்று 10 மணிக்கு லோக் சபா கூடியது. கூட்டம்
தொடங்கிய சில நிமிடங்களில் எதிர்க்கட்சி எம்பிகள் ரூபாய் நோட்டு விவகாரம்
குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதற்கு அனுமதி
கிடைக்காததால் எதிர்க்கட்சி எம்பிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத்
தொடர்ந்து சபாநாயகர் 12 வரை லோக் சபாவை ஒத்தி வைத்தார்.
பின்னர், 12 மணிக்கு மீண்டும் கூடிய போதும் எதிர்க்கட்சி எம்பிகள்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் அதிகரித்தது.
தொடர்ந்து அவை நடத்த முடியாத சூழ் நிலை ஏற்பட்டதால் திங்கள் கிழமை வரை லோக்
சபாவை ஒத்தி வைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.


No comments:
Post a Comment