காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட
வேண்டும் என்றும், சிறப்பு சட்டசபை கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற
வேண்டும் என்றும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து
எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைசெயலகத்திற்கு இன்று வந்த மு.க.ஸ்டாலின் காவிரி விவகாரம்
தொடர்பாக பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது
சென்னையில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை
பன்னீர்செல்வத்திடம் வழங்கினார். அப்போது அவர், காவிரி விவகாரம் தொடர்பாக
விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சந்திப்பின் போது பன்னீர் செல்வத்துடன், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும்
உடனிருந்தார். ஸ்டாலினுடன் எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், பொன்முடி,
மா,சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன், சேகர்பாபு ஆகிய திமுக எம்.எல்.ஏக்களும்
உடன் சென்றிருந்தனர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்,
காவிரி விவகாரம் தொடர்பாக விவசாயிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானத்தின் அறிக்கையை அமைச்சர்கள் பன்னீர்செல்வம், எடப்பாடி
பழனிச்சாமியிடம் கொடுத்தோம். இருவரையும் ஒரே அறையில்தான் சந்தித்து
பேசினோம். தலைமைச் செயலாளரை சந்திக்கவில்லை. அதனுடைய நகலை தலைமைச்
செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
நீதிமன்றம் என்பது வேறு, அது சட்டரீதியாக செல்ல வேண்டியது. எப்படி கர்நாடக
மாநிலத்தில் இருக்கக்கூடிய எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து தங்களுடைய
உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்களோ அந்த உணர்வை தமிழகத்தில் இருக்கக்கூடிய
மக்களும் வெளிப்படுத்தக்கூடிய வகையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட
வேண்டும் என்ற அடிப்படையில்தான் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தமிழக அரசின் நிர்வாகம் தொடர்பாக எதுவும் பேசவில்லை. நேற்று நாங்கள்
விவசாயிகள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் நகலை நிதியமைச்சரிடம்
கொடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் பன்னீர்செல்வமும்,
எடப்பாடி பழனிச்சாமியும் தெரிவித்துள்ளனர். காவிரி விவகாரத்தில்
அனைத்துக்கட்சியினரும் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று நாங்கள்
கூறியிருக்கிறோம். பரிசீலிக்கிறோம் என்று அமைச்சர்கள் உறுதிமொழி
தந்திருக்கிறார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
No comments:
Post a Comment