அரசு நிர்வாகத்தில் பல சட்ட விதிமுறைகள் உள்ளன. மரபுகள் உள்ளன.
சம்பிரதாயங்கள் உள்ளன. ஆனால் முதல்வர் ஜெயலலிதா விவகாரத்தில் தற்போது அது
கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதும் பெரும் குழப்பமாகவே உள்ளது.
முதல்வர் சுகவீனமாக உள்ள நிலையில் அரசு யார் பொறுப்பில் உள்ளது என்பது
இதுவரை தெரிவிக்கப்படவில்லை. சட்டப்படி பார்த்தால், முதல்வருக்கு அடுத்த
நிலையில் உள்ள மூத்த அமைச்சர்தான் முதல்வர் பொறுப்பை கவனிக்க வேண்டும்.
ஆனால் 2வது இடத்தில் உள்ளவரான ஓ.பன்னீர்செல்வத்தின் வசம் கடமைகள் இருப்பதாக
தெரியவில்லை.
ஓ.பன்னீர் செல்வம் கோட்டையில் அதிக நேரம் செலவிடுவதாக தெரியவில்லை.
முதல்வருடைய பொறுப்புகளை அவர் கவனித்து வருவதாக தகவல் இல்லை. அவர்
மருத்துவமனையில் இருந்து அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுகிறாரா என்பதும்
தெரியவில்லை.
அரசு விதிமுறை என்ன?
அரசின் விதிமுறைகளில் இது ஒன்று. ஒரு அதிகாரி இருக்கிறார். அவர் சற்று
நீண்ட நாள் விடுமுறையில் போகிறார். அப்படிப் போவதாக இருந்தால் அவரது
பொறுப்பை இன்னொரு அதிகாரியிடம் கொடுத்து விட்டு (சார்ஜ் கொடுப்பது)த்தான்
போக வேண்டும், போக முடியும். அவர் பாட்டுக்கு லீவு போட்டு விட்டு போய் விட
முடியாது.
பிரதமர் வெளிநாடு போகும்போது
இப்போது பிரதமர் மோடி வெளிநாடு போகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரது
பொறுப்புகளை அவர் திரும்பி வரும் வரை அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவரான
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்தான் கவனிப்பார். இதுகுறித்து முன்பு மோடி
வெளிநாடு போனபோது அரசிடமிருந்து அறிக்கையே கூட வந்தது. (அவர் அடிக்கடி
போகிறார் என்பதால் அடிக்கடி இதை சொல்ல மாட்டார்கள்)
முதல்வர் இல்லையென்றால்
தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்வர் நீண்ட நாள் விடுமுறையில் போகிறார் அல்லது
வெளிநாடு போகிறார் என்றால் அவர் வரும் வரை அவரது பணிகளை அதாவது அரசுக்குத்
தலைமை தாங்கி வழிநடத்தும் பொறுப்பு புரோட்டாகால்படி, நிதியமைச்சர்
ஓ.பன்னீர் செல்வத்திற்குத்தான் உண்டு. அவர்தான் அதைச் செய்ய வேண்டும்.
இப்போது வழிநடத்துவது யார்?
ஆனால் இப்போது அப்படி ஓ.பன்னீர் செல்வம் கையில்தான் அரசு உள்ளதா என்பது
தெரியவில்லை. எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஓ.பன்னீர் செல்வத்தை
அப்பல்லோ மருத்துவமனைக்குள்ளேயே அனுமதிக்கவில்லை என்று ஆரம்பத்தில்
செய்திகள், ஏன் படங்களே கூட வெளியாகின.
அப்படியானால் அரசு யாரிடம் இருக்கிறது?
அப்படியானால் இப்போது அரசு யார் வசம் இருக்கிறது என்ற பெரும் கேள்வி
எழுந்துள்ளது. தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் வசம் உள்ளதா அல்லது
ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் வசம் இருக்கிறதா அல்லது ஆளுநர் வசம் உள்ளதா
அல்லது வேறு யாரேனும் ஆட்சிபை் பொறுப்பை கவனிக்கிறார்களா என்பது
தெரியவில்லை.
சட்டப்படி விசாரிக்க வேண்டியது ஆளுநர்
உண்மையில் இதுகுறித்து விசாரித்து மக்களுக்கு நலம் பயக்கக் கூடிய
நடவடிக்கைகளை செய்ய வேண்டியவர் ஆளுநர். ஆனால் அவர் அதைச் செய்கிறாரா என்பது
தெரியவில்லை. இதுகுறித்தும் எந்தத் தகவலும் இல்லை.
மொத்தத்தில் தமிழக அரசைப் போலவே தமிழக மக்களும் பெரும் குழப்பத்தில்
மூழ்கிப் போயுள்ளனர்.
No comments:
Post a Comment