முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது குறித்து தொடர்ந்து சர்ச்சைகள்
நீடித்து வருகின்றன. இதுகுறித்து யாருமே பேச மறுக்கிறார்கள். ஏன்
பெரும்பாலான ஊடகங்களும் கூட இதுகுறித்து பேச மறுக்கின்றன. மக்களின் மனம்
கவர்ந்த, மக்கள் அன்பைப் பெற்று 2வது முறையாக முதல்வரான ஜெயலலிதாவின் உடல்
நலம் குறித்துக் கூட தகவல் தெரிவிக்காமல் இப்படி இருட்டடிப்பு செய்வது ஏன்
என்று பலரும் கேட்கிறார்கள்.
அரசுத் தரப்பில் இது நாள் வரை யாருமே பேசவில்லை. முறைப்படி பார்த்தால்
தலைமைச் செயலாளர் பேசியிருக்க வேண்டும் அல்லது முதல்வருக்கு அடுத்த
நிலையில் உள்ள அமைச்சரான ஓ.பன்னீர் செல்வம் பேசியிருக்க வேண்டும். ஆனால்
அவர்கள் இருவருமே வாயே திறக்கவில்லை.
ஆளுநருக்கு இதில் மிக முக்கியப் பொறுப்பு உள்ளது. அவர் முதல்வருக்கு
உடல் நலம் சரியில்லை என்றால் என்ன ஏது என்று விசாரித்து, அரசு நிர்வாகம்
சரியாக நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு
உள்ளது. ஆனால் ஆளுநர் பொறுப்பை வகித்து வரும் மகாராஷ்டிர ஆளுநர்
வித்யாசாகர் ராவ் இத்தனை நாட்களாக சென்னைக்கு வரவில்லை. நேற்றுதான்
வந்தார்.
அப்பல்லோவில் ஆளுநர்
நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார் வித்யாசாகர் ராவ்.
மருத்துவமனைக்குள் சென்ற அவர் சில நிமிடங்களில் திரும்பி விட்டார். நேராக
ராஜ்பவன் சென்றார். சில நிமிடங்களில் ஆளுநர் மாளிகையிலிருந்து முதன்மைச்
செயலாளர் பெயரில் ஒரு அறிக்கை வருகிறது.
வார்டுக்கு சென்று பார்த்தேன்
அந்த அறிக்கையில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் மிக மிக கவனமாக
எடுத்தாளப்பட்டிருப்பதை முதல் முறை படிக்கும் போதே எளிதாக புரிந்து
கொள்ளலாம். அதில் முதல்வர் ஜெயலலிதாவை அருகில் சென்று ஆளுநர் பார்த்ததாக
கூறப்படவில்லை. மாறாக முதல்வர் அனுமதிக்கப்பட்ட வார்டுக்குச் சென்று
பார்த்தேன் என்றுதான் கூறப்பட்டுள்ளது.
வெளியிலிருந்து பார்த்தாரா உள்ளே போய் பார்த்தாரா
இதை இப்படியும் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். அதாவது முதல்வர்
அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுக்கு வெளியிலிருந்தும் கூட முதல்வரை ஆளுநர்
பார்த்திருக்கலாம் என்று அர்த்தம் எடுத்துக் கொள்ள முடியும்.
பேசினாரா?
முதல்வரைச் சந்தித்து பேசியதாக எந்த இடத்திலும் ஆளுநர் குறிப்பிடவில்லை.
இதன் மூலம் அவர் முதல்வரை அருகே சென்று சந்திக்கவில்லை என்று ஊகிக்க
முடியும். மேலும் முதல்வருடன் அவர் பேசிய நலம் விசாரித்ததாகவும்
தெரியவில்லை. அப்படி எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் முதல்வர் பேசும்
நிலையில் இல்லையா என்ற கேள்வியை மக்கள் எழுப்புகிறார்கள்.
புகைப்படம் ஏன் வரவில்லை?
அதை விட முக்கியமாக முதல்வரை ஆளுநரைப் போய்ப் பார்த்தது தொடர்பாக எந்த
புகைப்படத்தையும் ஆளுநர் மாளிகையும் வெளியிடவில்லை. அப்பல்லோ மருத்துவனை
நிர்வாகமும் வெளியிடவில்லை. குறைந்தது முதல்வரை லாங் ஷாட்டில் வைத்து
விட்டு அந்த இடத்தில் ஆளுநர் இருப்பது போன்ற படத்தைக் கூட
வெளியிட்டிருக்கலாம். அப்படிக் கூட வெளியிடாதது ஏன் என்று தெரியவில்லை.
பிசி ரெட்டி கூட பேசிய படமாச்சம் வெளியிட்டிருக்கலாமே
அட அதைக் கூட விட்டு விடலாம். அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி
ரெட்டியுடன், ராவ் பேசிய படத்தையாவது வெளியிட்டிருக்கலாம். அமைச்சர்கள்
உடன் வந்ததாக ஆளுநர் அறிக்கை சொல்கிறது. அவர்களுடன் ஆளுநர் இருக்கும்
படத்தையாவது வெளியிட்டிருக்கலாம்.
ஏன் இந்தக் குழப்பம்
ஆனால் இப்படி எதுவுமே வெளியிடவில்லை. ஆளுநர் வந்தார், பார்த்தார், முதல்வர்
நலமாக இருப்பதாக கூறியுள்ளார், மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் என்று முன்னணி
ஊடகங்கள் தாங்களே செய்தியை உருவாக்கி வெளியிட்டு வருவதையும் மக்கள்
ரசிப்பதாக தெரியவில்லை. காரணம், ஆளுநர் அறிக்கையை படித்துப் பார்க்கும்
எவருக்குமே அது மிக மிக கவனமாக வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட அறிக்கை என்பது
தெளிவாகத் தெரியும். அப்படி இருக்கையில் ஏன் இன்னும் இந்த பூடக நிலை
தொடருகிறது என்பதுதான் மக்கள் மத்தியில் நிலவும் தொடர் கேள்வியாக உள்ளது.
மக்கள் தலைவர் ஜெயலலிதா
தனிப்பட்ட முறையில் யாருடைய உடல் ஆரோக்கியம் குறித்த தகவலையும் வெளியிட
வேண்டிய கட்டாயம் இல்லைதான். ஆனால் முதல்வர் ஜெயலலிதா மக்களின்
தலைவர்,மக்களால் விரும்பப்படும் தலைவர். அவருடைய உடல் நிலை என்ன, இப்போது
எப்படி இருக்கிறார் என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு
உள்ளது. அதை விட அவரது முகத்தை மட்டும் காட்டினால் கூட போதும். மக்கள்
நிம்மதி அடைவார்கள் இல்லாவிட்டால், முகத்தைக் கூட காட்ட முடியாத அளவுக்கு
முதல்வர் நிலை உள்ளதா என்ற சந்தேகம்தான் தேவையில்லாமல் வலுப்பெறும்.
No comments:
Post a Comment