சுவாதி படுகொலை வழக்கில் கைதாகி மர்மமான முறையில் மரணமடைந்த
ராம்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது பெற்றோரிடம்
ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று சொந்த ஊரான நெல்லை மாவட்டம் செங்கோட்டை
அருகில் உள்ள மீனாட்சிபுரத்தில் உடல் அடக்கம் நடைபெறவுள்ளது. தற்போது சொந்த
ஊருக்கு உடல் வந்து விட்டது.
உடல் அடக்கம் இன்று நடைபெறவுள்ளதால் அங்கு போலீஸார் பெருமளவில்
குவிக்கப்பட்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் போலீஸ் தலையாகவே காணப்படுகிறது.
சாப்ட்வேர் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் விசாரணை கைதியாக சென்னை
புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ராம்குமார். அவர் கடந்த 18-ந்
தேதி அன்று திடீரென்று மின்சார ஒயர்களை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக
கூறப்பட்டது.
ஆனால் ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் கொலை
செய்யப்பட்டதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டது. சிறையில் இருந்து
மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்
எனவும் கூறப்பட்டது; ராம்குமாரின் தந்தையும் இதுபோன்ற குற்றச்சாட்டை
தெரிவித்தார்.
இதையடுத்து ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனையில் தனியார்
மருத்துவரும் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து சட்டப் போராட்டம்
நடத்தினார் ராம்குமாரின் தந்தை பரமசிவம். ஆனால் எந்தக் கோர்ட்டும் அவரது
கோரிக்கையை செவி மடுக்கவில்லை.
இறுதியில் அரசு மருத்துவர்கள் 4 பேர் குழுவுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை
டாக்டர் சுதிர் கே குப்தாவும் இணணந்து ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை
நேற்று நடத்தினர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் ராம்குமாரின் உடல் அவரது
தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு தலைவர்கள் ராம்குமார்
உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து உடல் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ்
மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.
தற்போது ராம்குமாரின் உடல் மீனாட்சிபுரத்திற்கு வந்து விட்டது. அதைத்
தொடர்ந்து ஊர் மக்கள் அஞ்சலிக்குப் பின்னர் உடல் அடக்கம் நடைபெறும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் அடக்கம் நடைபெறவுள்ளதால் மீனாட்சிபுரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பின்
கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால்
ஊரே மயான அமைதியுடன் காட்சி தருகிறது.
ராம்குமார் மரணமடைந்து 15 நாட்களாகி விட்டது. ஆனால் அவரது பிரேதப் பரிசோதனை
தொடர்பாக அரசுத் தரப்பில் பிடிவாதம் காட்டி வந்ததால் சட்டப் போராட்டம்
நீண்டு பெரும் தாமதத்திற்குப் பின்னர் நேற்றுதான் பிரேதப் பரிசோதனை நடந்தது
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment