Latest News

ஜெ. உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்க கூடாது: இந்து ராம்

 
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்தால் நிச்சயம் சர்ச்சைகள் வரும் என்று மூத்த பத்திரிகையாளர் இந்து ராம் கூறியுள்ளார். இது தொடர்பாக பிபிசி தமிழோசை வானொலிக்கு இந்து ராம் அளித்த பேட்டி: தற்போதைய நிலையில் அரசியல் சாசனப்படி ஒரு மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ஒரு அரசாங்கம் தனிநபரைச் சார்ந்து இயங்க முடியாது. யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மருத்துவமனையில் இருந்தாலும் ஒரு அரசாங்கம் என்பது செயல்பட வேண்டும். இதில் தடை ஏற்பட்டால் நிச்சயம் அது தவறுதான். இதனால்தான் அரசியல் கட்சிகள் பொறுப்பு முதல்வர் கோரிக்கையை எழுப்புகின்றன.

ஜெயலலிதா தேறிவருகிறார்.. இன்னும் சரியான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. இது ஒரு அருவறுப்பான நிலை. ஜெயலலிதாவுக்கு டிராக்கியோஸ்டமி செய்திருக்கிறார்கள்.. அப்படியான ஒரு நிலையில் ஓரளவுக்கு முதல்வரிடம் அபிப்ராயங்களை கேட்க முடியும். அதே நேரத்தில் இந்த நிலையில் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டுமா? என்பதும் ஒரு கேள்விக்குறிதான். இதுபோன்ற கூடுதல் சுமையை இந்த நேரத்தில் அவருக்கு கொடுப்பது நல்லதா? என்ற கேள்வியும் இருக்கிறது.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஆனால் அதிமுகவில் ஜெயலலிதாவை கேட்காமல் எதுவும் செய்ய முடியாது. ஆகையால் ஜெயலலிதாவை தொந்தரவு செய்யாமல் முடிவெடுக்க வேண்டுமானால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முடிவெடுக்க வேண்டும். இதுதான் ஜனநாயக முறை. அரசாங்கத்தை அடுத்து யார் நடத்துவது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள்தான் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்க வேண்டும். நிச்சயமாக புதிய முதல்வர் என்பதை அதிமுகவினர் ஏற்கமாட்டார்கள்.

தைரியம் இருக்கிறதா? ஆகையால் துணை முதல்வரையோ அல்லது அரசாங்கத்தை வழிநடத்தக் கூடியவரையோ தேர்ந்தெடுக்கலாம். இப்படியான ஒரு முடிவை எடுக்க அதிமுகவினருக்கு தைரியம் இருக்கிறதா? என்பதெல்லாம் கேள்விக்குறிதான்.

மத்திய அரசு நெருக்கடி கூடாது இந்த நிலையில் அதை செய்யுங்கள்; இதை செய்யுங்கள் என்று கடுமையான கட்டளைகளை மத்திய அரசு பிறப்பிக்கக் கூடாது. மத்திய அரசு ஆலோசனைகள் கூறலாம்... அதை ஆளுநர் நடைமுறைப்படுத்தும் வழிகளை முன்னெடுக்கலாம். இதற்கு மாறாக மத்திய அரசு நேரடியாக உத்தரவுகளைப் பிறப்பித்தால் சர்ச்சைகள்தான் வரும்.

அப்ப அரசியல் ரீதியான அறிக்கை ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்த வேண்டும். தற்போது மருத்துவ அறிக்கைகளிலும் பத்திரிகைகளிலும் ஓரளவு தகவல்கள் வந்துள்ளன. ஆனால் முதல் ஒரு வாரம் எதுவுமே இல்லை என்பதுபோல மருத்துவ அறிக்கைகள் வந்தன. நிச்சயமாக அது மருத்துவர்கள் சொல்லியிருக்கமாட்டார்கள்... அது அரசியல் ரீதியாக வந்ததாகத்தான் இருக்கும்.

அறிக்கை சரியாக வர வேண்டும். இன்று அந்த நிலைமை மாறி சில விவரங்கள் வந்துள்ளன. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட், எய்ம்ஸ் மருத்துவர்கள் என பலரும் வந்ததால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் என்ன பிரச்சனை என்பது ஓரளவுக்கு தெரிந்துவிட்டது. மிக அதிகமாக தகவல்கள் தரவேண்டும் என்றும் நாம் வலியுறுத்தவும் முடியாது. முதல்வராகவே இருந்தாலும் அவர்களுக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. அவருக்கு என்னென்ன சிகிச்சைகள் தரப்பட்டன என்பது அனைத்தையும் வெளிப்படையாக சொல்ல தேவையில்லை. இருந்தாலும் நாள்தோறும் அவர் எப்படி இருக்கிறார் என்ற விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். இல்லையென்றால் வதந்திகள் வரத்தான் செய்யும். முதல்வர் எப்படி இருக்கிறார் என்பதை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது. இவ்வாறு இந்து ராம் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.