Latest News

மரபணு மாற்று விதைகளுக்கு எதிராக குரல் கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன், நடிகை ரோகிணி


மரபணு மாற்று விதைகளை இந்தியாவுக்குள் கொண்டு வந்தால் நம்முடைய பாரம்பரியமிக்க இயற்கை விதைகள் அழியும் என்பது இயற்கை ஆர்வலர்களின் அச்சம். பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்புடன், இயற்கை விவசாயிகள் சங்கம் இணைந்து, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதம் மற்றும் விதை சத்யாகிரகம் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தினர். சென்னையில் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், நடிகை ரோகிணி ஆகியோர் பங்கேற்று மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக குரல் கொடுத்தனர். மரபணுமாற்று கடுகு இந்தியாவில் நுழைந்தால், அடுத்து 50 வகையான மரபணுமாற்று பயிர்கள் உள்ளே நுழைய தயாராக உள்ளன. எக்காரணம் கொண்டும் பி.டி தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குள் வரவிட மாட்டோம். பி.டியை முழுமையாக ஒழிக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார்.

டெல்லிப் பல்கலைக்கழகம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை உருவாக்கியுள்ளது. இந்த மரபணு மாற்றுக் கடுகை வர்த்தக ரீதியாகச் சாகுபடி செய்ய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 'மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு' ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காந்தி ஜெயந்தி அன்று விவசாயிகள், மாடி தோட்ட பிரியர்கள், விதை சேமிப்பாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து தமிழகத்தில் 45 இடங்களில் மரபணு மாற்று பயிர்களுக்கும், உணவுக்கும் இருக்கின்ற எதிர்ப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துக் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

விதை சத்யாகிரகம் சென்னை, தி.நகர், போக் ரோட்டில் உள்ள தக்கர்பாபா வித்யாலயா பள்ளியில், காந்தி ஜெயந்தி தினமான நேற்று 'விதை சத்யாகிரகம்' என்ற பெயரில் மரபணு மாற்றுப் பயிர்களின் தீமைகளை எடுத்துரைக்கும் கண்காட்சி நடைபெற்றது. அதில், மரபணு மாற்று கடுகு பற்றிய விழிப்புணர்வு, பாரம்பரிய விதைகள், நஞ்சில்லா உணவு வகைகள், விதை பந்து தயாரித்தல், மண்பாண்ட தயாரிப்பு உள்ளிட்டவை குறித்து இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. பாரம்பரிய, சிறுதானிய உணவு அரங்குகள், இயற்கை காய்கறிகள், மரக்கன்றுகள், மண்பாண்டங்கள் ஆகியவை இடம் பெற்றிருந்த கண்காட்சியும் நடைபெற்றது. தெருக்கூத்து, தப்பாட்டம் என்று பாரம்பரியத்தை போற்றும் களைநிகழ்ச்சிகளும் அரங்கேறின.


மரபணு மாற்றுப் பயிர்கள் மரபணு மாற்றுப் பயிர்களால் உணவு உற்பத்தியை பெருக்க முடியாது. பூச்சித் தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களுக்காக மட்டும் இந்தியாவில் மரபணு மாற்று பயிர்களை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இதனை அனுமதித்தால் தீமை நமக்கு மட்டுமே என்று இந்த கண்காட்சியில் விவசாயிகள் எடுத்துக்கூறினர். இந்த விதை சத்யாகிரகம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பலர் மரபணு மாற்று கடுகுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முழக்கங்களை எழுப்பினர்.


இயக்குநர் வெற்றிமாறன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், அதிக கவலையுடன் பேசினார். ஒவ்வொரு நாளும் நம் குழந்தைகளுக்கு விஷத்தை உணவாக கொடுத்துக் கொண்டிருக்கிறோமே என்று நினைத்து பார்க்கும்போதெல்லாம் இரவில் தூக்கம்கூட வருவதில்லை. நம் எதிர்காலம் என்பது அடுத்த தலைமுறைதான். அவர்களுக்கு ஊட்டும் விஷத்தை நிறுத்தவேண்டும். இன்னும் சில காலங்களில் காற்று, தண்ணீர் எதுவும் இருக்காது. அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டுட்டு போகப்போகிறோம் என்பதுதான் நமக்கு முன் உள்ள சவால். இந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதை பார்க்கும் போதெல்லாம் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.


ஆதரவு உண்டு சில வருடங்களாகவே ஆர்கானிக், சிறுதானிய உணவுகளைத்தான் சாப்பிட்டு வருகிறேன். அப்போதிருந்தே எனக்கு உடலில் வித்தியாசங்கள் தெரிய ஆரம்பிச்சுடுச்சு. மக்கள் விழிக்கும் தருணம் இதுதான். உண்மையான சுதந்திரம், நம்முடைய உணவை நாமே உற்பத்தி செய்து சாப்பிடுவதில்தான் இருக்கிறது. மக்களோட சுதந்திரத்துக்கு எதிராகத்தான் ஆட்சியாளர்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். மரபணு மாற்று பயிர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு என்னுடைய ஆதரவு உண்டு என்றும் கூறினார்.


நடிகை ரோகிணி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரோகிணி, "மத்திய அரசின் மரபணு தொழில் நுட்பத்துக்கான உயர்மட்டகுழு, வணிகரீதியாக மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிர் செய்றதுக்கு அனுமதி வழங்குவதில் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர். இந்தியாவுல உணவு பயிருக்கு முதன்முதலா அனுமதி அளிக்கபட இருக்கிறது இந்த கடுகுக்குத்தான். மரபணு மாற்று உணவு பயிர்களுக்கு வேளாண் விஞ்ஞானிகள், வல்லுநர்கள் என்று உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


நுழைய விடமாட்டோம் பி.டி கத்திரிக்காய் அறிமுகப்படுத்தும்போது, மக்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பால் அதை நிறுத்தினார்கள். இப்போ அந்த மரபணு மாற்றத்தை தொழில்நுட்பத்தை கடுகில் புகுத்தியிருக்கிறார்கள். மரபணுமாற்று கடுகு இந்தியாவில் நுழைந்தால், அடுத்து 50 வகையான மரபணுமாற்று பயிர்கள் உள்ளே நுழைய தயாராக உள்ளன. எக்காரணம் கொண்டும் பி.டி தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குள் வரவிட மாட்டோம். பி.டியை முழுமையாக ஒழிக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. இங்கே வந்திருப்பவர்கள் உங்களுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு மரபணு மாற்று கடுகோட தீங்கை எடுத்துக்கூறுங்கள் என்றார் ரோகிணி.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.