காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய
அரசு திடீரென அந்தர் பல்டி அடித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க
எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி
உச்சநீதிமன்றத்தில் இன்று திடீரென திருத்த மனு ஒன்றைத் தாக்கல்
செய்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி காவிரி வழக்கு விசாரணை
நடைபெற்றது. அப்போது நடைபெற்ற விசாரணையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித்
ஆகியோர் அடங்கிய பெஞ்ச், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை
அமல்படுத்தும் நடவடிக்கை எந்த அளவில் உள்ளது?' என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு
ஈடுபட்டுள்ளது என்றார். இந்த விசாரணையின் முடிவில், காவிரி நடுவர்மன்ற
இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை வரும் அக்டோபர் 4 அல்லது
அதற்கு முன்பாக அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த
வாரியத்தில் இடம் பெறும் உறுப்பினர்களின் பெயர்களை சம்பந்தப்பட்ட தமிழகம்,
கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் சனிக்கிழமை மாலை 4
மணிக்குள் மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திடம் அளிக்க வேண்டும். இதைத்
தொடர்ந்து அமைக்கப்படும் காவிரி மேலாண்மை வாரியத்தின் உறுப்பினர்கள்,
காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளைப் பார்வையிட்டு நிலவர அறிக்கையை உச்ச
நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
கர்நாடகா பிடிவாதம்
இதனைத் தொடர்ந்து தமிழகம், கேரளா, புதுவை அரசுகள் மேலாண்மை வாரியத்துக்கான
பிரதிநிதிகள் பெயரை பரிந்துரைத்தது. ஆனால் கர்நாடகாவோ மேலாண்மை வாரியத்தை
ஏற்க முடியாது; பிரதிநிதியை பரிந்துரைக்க முடியாது என பிடிவாதம் பிடித்தது.
மத்திய அரசு பல்டி
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகாவின் பிடிவாதம் குறித்து மத்திய
அரசு முறையிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு திடீரென இன்று
பல்டி அடித்துள்ளது தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதிகாரம் இல்லை
உச்சநீதிமன்றத்தில் இன்று ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல்
ரோத்தகி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்
உத்தரவிட முடியாது. காவிரி நீர் திறப்பு தொடர்பான வழக்கைத்தான் இந்த 2
நீதிபதிகள் பெஞ்ச் விசாரித்து வருகிறது.
திருத்தம் செய்யுங்கள்...
இந்த உத்தரவின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க
முடியாது. இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய
வேண்டும் என்று மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மத்திய அரசின் இந்த திருத்த
மனு மீது நாளை பிற்பகல் 2 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment