முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ
மருத்துவமனைக்கு திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள்
நேற்று இரவு திடீரென சென்று சசிகலாவை சந்தித்து பேசியது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா 22 நாட்களாக சிகிச்சை பெற்று
வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள்
தெரிவித்து வருகின்றனர்.
அருண்ஜேட்லி, அமித்ஷா, ராகுல்
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க அரசியல் கட்சித் தலைவர்கள்,
மத்திய அமைச்சர்கள் நாள்தோறும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று
வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, வெங்கையா நாயுடு, பாஜக
தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி என டெல்லி
தலைவர்களும் அப்பல்லோ வந்து செல்கின்றனர்.
ஸ்டாலின்
தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெரும்பாலானோர் அப்பல்லோ
மருத்துவமனைக்கு வருகை தந்து ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று
ஜெயலலிதா உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். சசிகலா நடராஜனை ஸ்டாலின்
சந்தித்ததாக கூறப்பட்டாலும் தாம் அமைச்சர்கள் மற்றும் மருத்துவர்களை
மட்டும் சந்தித்ததாக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
ராஜாத்தி அம்மாள்
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள்
திடீரென நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சசிகலாவை
சந்தித்து ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
45 நிமிடம் பேச்சு
இருவரும் சுமார் 45 நிமிடம் பேசிக் கொண்டிருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. திமுகவினரை பரஸ்பரம் சந்தித்துக் கொண்டாலே தலைமை
கோபப்படுமோ என அச்சப்படுவர் அதிமுகவினர்... தற்போது திமுக தலைவர் கருணாநிதி
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து வந்து சசிகலாவை நேரில்
சந்தித்து ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்து விட்டு செல்வதை
ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.
No comments:
Post a Comment