Latest News

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு 4 குழந்தைகள் மரணம்

 
 சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததால் பெற்றோர்கள் பீதியடைந்துள்ளனர். சென்னை பொழிச்சலூர் லட்சுமி நகரில் வசித்து வருபவர் இத்ரி. இவருக்கு பாகிமா, 8 என்ற மகளும், முகமது,4 என்ற மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக மகன், மகள் இருவருக்கும் காய்ச்சல் இருந்தது. இதனால் அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றனர். 4 நாட்கள் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை.

இதைத் தொடர்ந்து எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் வியாழக்கிழமையன்று 2 குழந்தைகளையும் இத்ரி சேர்த்தார். அப்போது குழந்தைகளின் உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கவே, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி முதலில் பாகிமா உயிர் இழந்தார். சிறிது நேரத்தில் முகமதுவும் பரிதாபமாக இறந்தான். ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகளும் அடுத்தடுத்து இறந்ததால் ஆஸ்பத்திரியில் மரண ஓலம் கேட்டது. பெற்றோர் கதறி அழுதனர். இது போல மதுரவாயல் கார்மேகம் நகர், அரக்காணல் தெருவை சேர்ந்த ஆரோக் கியசாமி மகள் லட்சிதா,11. காய்ச்சலில் பாதிக்கப்பட்ட இந்த சிறுமியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள்.அவளது உடல் நிலையும் மிகவும் மோசமடைந்து நேற்று இரவு இறந்தாள். மர்ம காய்ச்சலுக்கு ஒரே நாளில் 3 குழந்தைகள் பலியான சம்பவம் சுகாதாரத்துறைக்கு உடனடியாக தெரிவிக்கப் பட்டது. இதனிடையே குழந்தைகள் மருத்துவமனையில் காசநோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி கீர்த்தனா,11 நேற்று இறந்தார். இதனால் குழந்தைகளின் பலி எண்ணிக்கை 4 ஆனது. இந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியும் காய்ச்சலில் இறந்துள்ளார். இதையடுத்து பொழிச்சலூர், மதுரவாயல் பகுதியில் சுகாதார தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாக காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் கொசுக்களை அழிக்கவும், குடிநீரில் குளோரின் அளவு எவ்வளவு இருக்கிறது என்றும் ஆய்வு செய்யப்படுகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.