Latest News

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை படுமோசம்… சொல்கிறது சிஏஜி அறிக்கை


சிஏஜி எனப்படும் மத்திய அரசின் தணிக்கைத் துறை அறிக்கை, தமிழ் நாட்டில் உள்ள பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளது. சட்டப் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்ற போது, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை முன் வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பது குறித்து விரிவாக அலசப்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளிக் கல்வித்துறையில் நடந்துள்ள அரசின் நிர்வாக சீர்கேடுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் மாணவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய 724 லேப்டாப்கள் திருடப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் 558 லேப்டாப்கள் யார் எடுத்தது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் பள்ளிகளில் போதிய அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே இதற்கு காரணம் என்றும் சிஏஜி அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு பல இடங்களில் லேப்டாப்கள் கொடுக்கப்படாத சூழலில், சில சுயநிதி கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளதையும் சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது.

அதே போன்று, ஈரோடு ரயில்வே காலனியில் உள்ள ஒரு பள்ளியில் 16 வகுப்பறைகளை கல்வித்துறையின் பொருள்களை சேமித்து வைக்கும் கிடங்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும், சில இடங்களில் திறந்தவெளியிலேயே சமைக்கப்படுகின்றன. தீயணைக்கும் கருவி உள்ளிட்ட உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கெல்லாம் இல்லை. அந்த இடங்கள் எல்லாம் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை. பள்ளிக்கூடங்களில் போதுமான கழிப்பறை வசதிகள் இல்லை என பல்வேறு விஷயங்களை சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அரசுப் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குப் பாடவாரியான ஆசிரியர்கள் இல்லை என்பதையும் சிஏஜி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுப் பட்டியலில் இருந்து மத்தியப் பட்டியலுக்கு கல்வியை மாற்ற வேண்டும் என்பதை நோக்கி மத்திய அரசு செல்கிறது. அதையொட்டியே தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த உள்ளது. எனவே, தமிழக பள்ளிக் கல்வித்துறையை சீரமைக்கும் பணியை அரசு உடனே வேகப்படுத்த வேண்டும். மேலும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று கூறினார். சிஏஜி அறிக்கை குறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், " தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மூடப்படுவது குறித்தோ, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஐந்து முதல் 10 வரைதான் உள்ளது என்பதை பற்றியோ அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை. தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்படுவது பற்றியும் கல்வி மானியக் கோரிக்கையில் எதுவுமே சொல்லப்படவில்லை. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் கடந்த 9 ஆண்டுகளில் 90 ஆயிரம் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. அரசுப் பள்ளிகள் மூடப்பட்டால் ஏழைக் குழந்தைகள் எங்கே செல்வார்கள்? " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.