தமிழக விவசாயிகளை பைனான்ஸ் கம்பெனி ஓனர்கள் என தமிழக அமைச்சர் கருப்பண்ணன் பேசிய பேச்சுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:
அ.தி.மு.க. அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக உள்ள கருப்பண்ணன் என்பவர் பேசும்போது சுற்றிலும் பிரச்சினைகளுக் கிடையேயும் மிகுந்த சிரமத்திற்கிடையேயும், வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் விவசாயிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, "விவசாயிகள் பைனான்ஸ் கம்பெனி நடத்துகின்றனர். வங்கிகளில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். கோடிக் கணக்கில் பணம் வைத்துள்ளதோடு பல தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடத்துவது தேவையற்ற போராட்டம்" என்றெல்லாம் தேவையில்லாத வார்த்தைகளை, விவசாயிகளைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசியிருக்கிறார்.
இது போலவே மற்றொரு அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி என்பவரும் பேசியிருக்கிறார். விவசாய சங்கத்தினர் மிகவும் மனம் நொந்து அ.தி.மு.க. அமைச்சர்களின் இப்படிப்பட்ட பேச்சுகள் விவசாயிகளை மிகவும் மனம் நோக வைத்திருப்பதாகவும், இந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்கள். தமிழக விவசாயிகளின் வேதனையைத் தீர்க்க எவ்வித முயற்சியும் செய்யாமல், அவர்களைப் பற்றிக் கீழ்த்தரமாகப் பேசும் அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சுகளுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


No comments:
Post a Comment