சென்னை புழல் சிறையில் ராம்குமார் வயரைக் கடித்துத் தற்கொலை செய்து
கொண்ட இடம் இதுதான் என்று கூறி சமூக வலைதளங்களில் சில புகைப்படங்கள்
வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து தி நியூஸ்மினிட் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ராம்குமார்
இந்த சிறை அறையில்தான் இருந்தார் என்றும், இந்த இடத்தில் உள்ள சுவிட்ச்
பாக்ஸைத்தான் உடைத்து வயரைக் கடித்துக் கொண்டதாக சிறை அதிகாரிகள் கூறியதாக
அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமாரின் மரணம், சுவாதி
கொலையை விட மர்மம் நிறைந்ததாக உள்ளது. அவர் எப்படி இறந்தார் என்பது மிகப்
பெரிய புதிராக மாறியுள்ளது. தங்களது மகனை கொலை செய்து விட்டதாக
ராம்குமாரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். பல்வேறு கட்சிகள்,
தமிழர் அமைப்புகளும் கூட இது கொலை என்றுதான் கூறி வருகின்றன.
இந்த நிலையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட இடம் என்று கூறி சில
புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதை நியூஸ்மினிட்டும் வெளியிட்டுள்ளது.
இரண்டு போட்டோக்கள் இதில் உள்ளன. லாங் ஷாட்டில் எடுக்கப்பட்ட
புகைப்படத்தில் நீண்ட காரிடார் தெரிகிறது. அதன் குளோசப் படத்தில் அறைக்கு
வெளியே சுவிட்ச் பாக்ஸ் ஒன்று உடைக்கப்பட்டு வயர்கள் தொங்குவது போலத்
தெரிகிறது. இந்த வயரைத்தான் பிடித்துக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து
கொண்டதா சொல்லப்படுகிறது.
இந்தப் படங்களின் நம்பகத்தன்மை தெரியவில்லை. இது புழல் சிறை அறையா,
இங்குதான் ராம்குமார் தங்கியிருந்தாரா என்பது தெரியவில்லை.
இருப்பினும் இந்த இடத்தில்தான் ராம்குமார் தங்கியிருந்ததாகவும், இந்த
சுவிட்ச் பாக்ஸைத்தான் உடைத்து வயரைக் கடித்து உயிரிழந்ததாகவும் பெயர்
சொல்ல விரும்பாத சிறை அதிகாரி ஒருவர் கூறியதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
செய்தி வெளியிட்டுள்ளது.
ராம்குமார் மரணம் தொடர்பாக பல குழப்பங்கள், கேள்விகள், சந்தேகங்கள் நிலவி
வரும் நிலையில் தற்போது ராம்குமார் கடித்துக் கொண்டதாக கூறப்படும் வயர்
குறித்த படங்கள் வெளியாகியுள்ளது புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


No comments:
Post a Comment