மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பெயர்,
புகைப்படத்தை அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சி பயன்படுத்த விதிக்கப்பட்ட
இடைக்காலத் தடையை நீக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கனவு கண்ட தமிழகத்தை
உருவாக்குவதற்காக, அவரின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், அப்துல்கலாம்
லட்சியக் இந்தியா என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கி இருந்தார்.
இதனையடுத்து, அப்துல்கலாமின் பெயரில் அரசியல் கட்சி தொடங்க தடை
விதிக்க வேண்டும் என கோரி கலாமின் சகோதரர் முகமது முத்து மீரான் மறைக்காயர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்துல் கலாம்
பெயரை அரசியல் கட்சிக்கு பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம்
உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சி சார்பில்,
பொன்ராஜ் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் முன்பு கடந்த ஜூலை 20ஆம் தேதி
விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் முதன்மை
செயலாளர் வரிந்தர் குமார் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தேசிய
தலைவர்கள் பெயரை அரசியல் கட்சிக்கு பயன்படுத்துவதை தடுக்க முடியாது
என்றும், தேசிய தலைவர்களை தனி நபர்கள் உரிமை கோர முடியாது என்றும்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், அப்துல் கலாமின் பெயர்,
புகைப்படத்தை அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சி பயன்படுத்த விதிக்கப்பட்ட
இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டார்.


No comments:
Post a Comment