காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில்
நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு மேற்கொண்டு
காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க கூடாது என ஒருமித்த குரல்
எழுப்பியுள்ளனர்.
காவிரி நீர் தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று
முதல் வருகிற 27ம் தேதி வரை 7 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்துக்கு
தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு
கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது
குறித்து ஆலோசனை நடத்த இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனைத்
தொடர்ந்து மாலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி
கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் கர்நாடக தலைமைச் செயலகமான விதான சவுதாவில் நடைபெற்றது. இதில்
உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என தலைவர்கள் கருத்து
தெரிவித்தனர்.
தமிழகத்திற்கு மேற்கொண்டு காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க கூடாது எனவும்
தேவகவுடா உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்னும்
சிறிது நேரத்தில் அவசர அமைச்சரவை கூட்டம் முதல்வர் தலைமையில் தொடங்குகிறது.
அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு இறுதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது
24ம் தேதி நடைபெற உள்ள சிறப்பு பேரவை கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு
எதிராக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அனைத்து கட்சி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த
தலைவர்கள் வீரப்பமொய்லி, மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர்
குமாரசாமி, அமைச்சர்கள் பரமேஷ்வர், எம்.பி.பாட்டீல் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.


No comments:
Post a Comment