ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஹைதராபாத் திரும்பினார். ஏர்போர்ட்டில் அவருக்கு ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பின்னர் ஏர்போர்ட்டில் இருந்து கச்சிபவுலி மைதானம் வரை திறந்த பஸ்சில் வெற்றி ஊர்வலம் நடைபெற்றது. ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மின்டன் இறுதி போட்டியில் தோற்றாலும், வெள்ளி வென்று சாதித்தார் பி.வி.சிந்து. பேட்மின்டனில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புகழை பெற்றார்.
பெரும்பாலான இந்திய வீரர்-வீராங்கனைகள் ஏமாற்றிய நிலையில் சிந்து பெற்ற வெள்ளியும், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கின் வெண்கலமும் இந்திய மானத்தை காத்தன. இந்நிலையில், சிந்துவும் அவரது வெற்றிக்கு காரணமாக புகழப்படும் பயிற்சியாளர் கோபிச்சந்தும், இன்று ஹைதராபாத் திரும்பினர். காலை சுமார் 9.30 மணிக்கு ஏர்போர்ட் வந்த அவர்களுக்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாலை அணிவித்தும், இனிப்பு ஊட்டியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட திறந்த பஸ்சில் ஹைதராபாத்தில் சிந்து மற்றும் கோபிசந்த்துக்கும் வெற்றி ஊர்வலம் நடத்தப்பட்டது. ஏர்போர்ட்டில் இருந்து, கச்சிபவுலி மைதானம் வரை பஸ் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது சாலையின் இரு பக்கங்களிலும் நின்ற ரசிகர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வாழ்த்து கோஷம் எழுப்பினர். தேசிய கொடியை அசைத்து உற்சாகம் காண்பித்தனர்.
பஸ் சென்ற பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் ஹைதராபாத் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கச்சிபவுலி மைதானத்தில் ஆந்திர-தெலுங்கானா மாநில பாரம்பரிய மேளங்கள் இசைக்கப்பட்டன. நடனங்கள் அரங்கேறின.




No comments:
Post a Comment