கர்நாடகாவில் தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் தரமுடியும் என்றும் காவிரி பிரச்சனை தொடர்பான வழக்குகளை கர்நாடக அரசு சட்டப்படி சந்திக்கும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி, ஆகஸ்ட் 19ம் தேதி 50.52 டிஎம்சி தண்ணீரை, தமிழகத்திற்கு, கர்நாடகா திறந்துவிட வேண்டும். ஆனால் அணைக்கட்டுகளில் போதிய நீர் இல்லை என்று காரணம் கூறிக்கொண்டு, கர்நாடகா இன்னும், தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடாமல் உள்ளது.
எனவே, தமிழகத்துக்கு உரிய பங்கு நீரைப் பெற்றிட உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு இன்னும் ஓரிரு தினங்களில் தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த வாரம் சட்டசபையில் அறிவித்தார். அதன்படி தமிழகம் சார்பில் இடைக்கால மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா 'காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகம் தொடர்ந்துள்ள அனைத்து வழக்குகளையும் கர்நாடகா அரசு சட்டப்படி சந்திக்கும் என்றார். மேலும் அவர் கூறுகையில், கர்நாடகாவில் தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகம் விவசாயத்திற்கு காவிரி நீரைக் கேட்பது வேதனையளிக்கிறது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தமிழகம் தங்கள் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார். வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு, கர்நாடகா இரண்டு மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment