கனகநாச்சியம்மன் கோவிலை ஆந்திர அரசுக்கு தாரை வார்க்காமல் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சனையை பெரும் பிரச்சனையாக மாறாமல் ஆரம்பத்திலையே கிள்ளி எறிந்து, இரு மாநில உறவுகளை கட்டி காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மற்றும் ஆந்திர எல்லையில் பெரும்பள்ளம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் பிரச்சனை நிலுவையில் உள்ளது. இந்த இடத்தில் கனகநாச்சியம்மன் கோவிலும் அமைந்துள்ளது.
இந்த கோவிலை கடந்த 40 ஆண்டுகளாக தமிழக இந்து அறநிலையத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு, கோவில் அர்ச்சகர்கள் தமிழக அரசால் நியமிக்கப்பட்டு, கோவில் செலவுகள் அனைத்தும் தமிழக அறநிலையத்துறையே பராமரித்து வந்தது. சில தினங்களுக்கு முன் இந்த கோவிலை ஆந்திர அறநிலையத்துறை கைப்பற்றி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் முக்கியமாக ஆடி மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவதால், இரு மாநில எல்லை பிரச்சனையாக மாறா வண்ணம், சுமூகமாக பேசி தீர்த்தோ அல்லது நீதிமன்றம் மூலம் நல்ல ஒரு முடிவை எடுப்பது மிகவும் அவசியமாகும். ஏற்கனவே தமிழகத்திற்கு, கர்நாடக, கேரளா, ஆந்திரா மாநிலங்களால் தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில், இந்த கோவில் பிரச்சனையும் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஆடி மாதம் வர இருப்பதால், தமிழக அரசு இந்த பிரச்சனையை பெரும் பிரச்சனையாக மாறாமல் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து, இரு மாநில உறவுகளை கட்டி காப்பாற்ற வேண்டும்.
மீனவர் பிரச்சனைகளுக்கு பிரதமருக்கு, முதல்வர் கடிதம் எழுதுவதை வாடிக்கையாக வைத்துள்ள நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், அணைகட்டும் பிரச்சனை மற்றும் கோவில்
பிரச்சனைகளுக்கும் கடிதம் ஒன்றை எழுதி, இந்த பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதை மென்மையாக கையாளாமல், கனகநாச்சியம்மன் எல்லை கோவிலை நாம் ஆந்திர
மாநிலத்திற்கு தாரை வார்க்காமல் காப்பாற்றிட வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment