Latest News

மீன் வாங்க வந்தேன்.. தேவையில்லாமல் நந்தினி உயிரிழக்க காரணமாகி விட்டேன்.. கொள்ளையன் புலம்பல்


நான் மீன் வாங்கத்தான் வந்தேன். ஆனால், ஏடிஎம் மையத்திலிருந்து வெளியே வந்த நந்தினி பணத்தை ஹேன்ட்பேக்கில் வைத்ததைப் பார்த்து சபலப்பட்டு பறிக்க முயன்றேன். ஆனால் அது கடைசியில் இரு உயிர்கள் பறி போக காரணமாகி விட்டது என்று கூறியுள்ளார் கருணாகரன். சென்னையை உலுக்கிய நந்தினி மற்றும் சாகர் ஆகிய இருவரின் உயிரிழப்புக்குக் காரணமான கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இருவரில் கருணாகரன் என்பவர் மட்டுமே பிடிபட்டுள்ளார். இவர் ஒரு ரவுடி. செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மீது பல வழக்குகள் உள்ளன. பெரும்பாலானவை சங்கிலிப் பறிப்புதான். சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்களிடம் சிக்கிய கருணாகரனுக்கு மக்கள் சரமாரியாக அடி கொடுத்தனர். பின்னர் போலீஸார் வந்து இவரை மீட்டு கைது செய்தனர். இந்த நிலையில் கருணாகரன் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 

மீன் வாங்க வந்தேன் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் இரவு நேரத்திலும் மீன் விற்பனை நடைபெறுவது வழக்கம். இரவு நேரத்தில் அங்கு மீன் வாங்கினால் குறைந்த விலைக்கு கிடைக்கும். சம்பவத்தன்று இரவும் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதிக்கு நான் மோட்டார் சைக்கிளில் மீன் வாங்குவதற்காகதான் வந்தேன். மந்தைவெளி-ஆர்.கே.மடம் சாலை வழியாக நான் வந்தேன். அங்கு நந்தினியும், அவரது உறவுப்பெண்ணும் ஏ.எடி.எம்.லிருந்து பணம் எடுத்து வந்ததை பார்த்தேன். அந்த பணத்தை பையில் போட்டு நந்தினியின் உறவுப்பெண் கையில் வைத்துக்கொண்டார்.
நந்தினி பணத்தைப் பார்த்து ஆசை நந்தினி மொபட்டை ஓட்டிச் சென்றார். இதை நான் தூரத்தில் இருந்து கண்காணித்தபடி பின்தொடர்ந்தேன். அப்போது போதையில் இருந்த எனக்கு நந்தினியின் உறவுப்பெண் கையில் வைத்திருந்த பணப்பையை பிடுங்கலாம் என்ற ஆசை ஏற்பட்டது. இதனால் அவர்கள் பின்னால் மெதுவாக மோட்டார் சைக்கிளில் வந்தேன். பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே செல்லும்போது நந்தினி மிகவும் மெதுவாக மொபட்டை ஓட்டினார். அந்த இடம் எனக்கு பணப்பையை பிடுங்குவதற்கு வசதியாக இருந்தது. அதை பயன்படுத்தி நந்தினியின் உறவுப்பெண் வைத்திருந்த பணப்பையை லாவகமாக பறித்தேன்.

கூச்சல் போட்டு துரத்தினார் நந்தினி பணப்பை எனது கைக்கு வந்துவிட்டது. உடனே வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றேன். நந்தினி கூச்சல் போட்டபடி என்னை பின்தொடர்ந்து விரட்டி வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவரது கூச்சல் கேட்டு அந்த பகுதியில் இருந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு விட்டனர். நான் எந்த வழியாக செல்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. 

முட்டுச் சந்துக்குள் போனதால் சிக்கினேன் திடீரென்று வலது பக்கம் திரும்பி பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் குடிசை பகுதிக்குள் சென்றுவிட்டேன். அது முட்டு சந்தாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அந்த பகுதி இருட்டாக இருந்ததால் எளிதில் தப்பி விடலாம் என்று நினைத்து அங்கு சென்றேன். முட்டு சந்தாக இருந்ததால் என்னை எளிதில் மடக்கி பிடித்துவிட்டனர்.

இதுவரை யார் சாவுக்கும் காரணமாக இருந்ததில்லை 2 பேர் என்னால் இறந்து போனார்கள் என்று போலீசார் சொன்னார்கள். நான் இதுவரை

கொலைக்குற்றம் செய்யவில்லை. முதல்முறையாக 2 பேர் உயிரிழப்புக்கு காரணமாகி விட்டேன் என்று கூறியுள்ளார் கருணாகரன்.

யமஹா கண்ணன் இவருக்கு யமஹா கண்ணன் என்ற செல்லப் பெயரும் உண்டு. 8 காவல் நிலையங்களில் இவர் மீது வழக்குகள் உள்ளன. தற்போது கருணாகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது விரைவில் குண்டர் தடுப்புச் சட்டம் பாயவுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.