Latest News

என்னாது ஜெ.வின் ஆர்.கே.நகரில் போதை சாக்லேட்டா... (ரொம்ப லேட்டாக) ஷாக்கான விஜயகாந்த்!


முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவது அறிந்து மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்ததாகவும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடவேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதேபோல், முதல்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்பட்டது குறித்து ஜெயலலிதா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:-

ஆர்.கே.நகரில்... தமிழகத்தின் தலைநகர் சென்னையில் சில தினங்களுக்கு முன்பு உலக சாக்லேட் தினம் கொண்டாடிய நிலையில், முதல்வர் தொகுதியான ஆர்.கே.நகர் மற்றும் பல பகுதிகளில் போதை சாக்லேட் விற்பனை செய்யப்பட்டதை அறிந்தபோது மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.

பள்ளி மாணவர்கள்... காரணம் வருங்கால தமிழகத்தை வளமான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பள்ளி மாணவர்களை குறிவைத்து, பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் பல நாட்களாக போதை சாக்லேட் விற்பனை செய்யப்பட்டு வந்ததையும், இதனால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவன் முற்றிலும் சுயநினைவை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருப்பதையும் கேள்விப்படும்போது , இதை சாதாரணமான நிகழ்வாக எடுத்துகொள்ளாமல் உடனடியாக அனைத்து இடங்களிலும் காவல் கண்காணிப்பை பலமடங்கு பலபடுத்தி இதுபோன்ற சட்டவிரோத செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
அனுமதிக்க முடியாது... ஏற்கனவே மதுக்கடைகள் மூலம் தமிழகம் சீரழிந்துள்ள நிலையில் இதுபோன்ற விற்பனைகளை நிச்சயம் அனுமதிக்கமுடியாது' என அவர் தெரிவித்துள்ளார்.

நந்தினி மரணம்... இதேபோல், மதுக்கடைகள் மூடல் குறித்த அறிக்கையில், "மதுக்கடைகளால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, உதாரணமாக இரண்டு தினங்களுக்கு முன்பு கூட பட்டினப்பாக்கம் அருகில் ஏடிஎம்-ல் பணம் எடுத்து வந்த நந்தினி என்ற பெண்ணிடம் செயின் பறிப்பு, பணம் திருடுதல், போன்ற செயல்களால் அந்த பெண் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் குறிப்பாக அந்தபகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்ப்பாட்டம்... மேலும் அந்த பெண்ணின் குடும்பநிலை பெரும் கேள்விக்குறியாகி உள்ளது, அந்த பகுதி மக்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி உடனடியாக அப்பகுதியில் உள்ள மதுக்கடையை மூடுமாறு வலியுறுத்தியுள்ளனர். 

வெள்ளை அறிக்கை தேவை... ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றவுடன் 5௦௦ மதுக்கடைகள் மூடப்படும் என கையெழுத்திட்டார், ஓட்டளித்த மக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் எந்தெந்த பகுதிகளில் எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், மேலும் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் இனிமேலும் நடைபெறாத வண்ணம் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.