வீடியோ கான்பரன்சிங் மூலமாக நேற்று எழும்பூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட ராம்குமார், இந்த வழக்கு தொடர்பாக எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறினார். சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் சிறைக் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து நேற்று அவரை எழும்பூர் 14வது பெருநகர மாஜிஸ்திரேட் கோபிநாத் முன்பு ஆஜர்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் ராம்குமாரை கோர்ட்டுக்குக் கொண்டு வரும்போதும், திரும்ப அழைத்துச் செல்லும்போதும் பெரும் கூட்டம் கூடுவதாலும், மீடியா வெளிச்சத்தை தவிர்க்க முடியவில்லை என்பதாலும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜர்படுத்த போலீஸார் திட்டமிட்டனர்.
அதன்படி நேற்று மாஜிஸ்திரேட் கோபிநாத் முன்பு வீடியோ கான்பரன்சிங் மூலமாக போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது ராம்குமாரின் சிறைக்காவலை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட் கோபிநாத் உத்தரவிட்டார். முன்னதாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று மாஜிஸ்திரேட் கோபிநாத் ராம்குமாரைப் பார்த்துக் கேட்டார். அதற்கு ராம்குமார் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று மட்டும் பதிலளித்தார். இதற்கிடையே, சுவாதி கொலை வழக்கில் கிடைத்துள்ள புதிய ஆவணங்களாக சிலவற்றை நேற்று மாஜிஸ்திரேட் முன்பு போலீஸார் சமர்ப்பித்தனர். மேலும், ராம்குமார் கொலை சமயத்தி் பயன்படுத்திய சட்டையில் படிந்திருந்த ரத்தக்கறை மற்றும் சுவாதியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரி ஆகியவை ஒத்துப் போகிறதா என்பதை அறியும் தடயவியல் சோதனைக்கான அனுமதியையும் கோரி ஒரு மனுவையும் நேற்று போலீஸார் சமர்ப்பித்தனர்.


No comments:
Post a Comment