மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி விலகுவதாக அறிவித்த பரபரப்பு அடங்குவதற்குள் மக்கள் நலக் கூட்டணியே கலைக்கப்பட்டுவிட்டதா? என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் மதிமுக பொதுச்செயலர் வைகோவின் ஃபேஸ்புக் பதிவு இடம்பெற்றுள்ளது. சட்டசபை தேர்தலில் டெபாசிட்டை பறிகொடுத்ததால் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து கட்சிகள் சிதறி தப்பி ஓடிக் கொண்டிருக்கின்றன. தேமுதிக, தமாகா, தமிழர் முன்னேற்றப் படை என அடுத்தடுத்து கட்சிகள் விலகி வருகின்றன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கூட திமுக திசையை நோக்கி திரும்பிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போதைய அரசியல் நிலவரம், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவை குறித்து மதிமுக தலைமையகமான தாயகத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இடதுசாரி தலைவர்கள் ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து வைகோ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான தாயகத்தில் "மக்கள் நலக் கூட்டியக்க கூட்டம்" நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டு படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்தப் பதிவால் மக்கள் நலக் கூட்டணி என்பதையே அடியோடு கலைத்துவிட்டு இனி மக்கள் நலக் கூட்டியக்கமாக மட்டுமே செயல்படுவது என முடிவெடுத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


No comments:
Post a Comment