துருக்கியில் அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டதாக 754 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 ராணுவ தளபதிகள், 20 கர்னல்கள் பதவிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டின் கிழக்கு எர்ஜின்கான் மாகாணத்தின் ராணுவ தளபதியும் கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கியில் அதிபர் எர்டோகன் அரசை கவிழ்த்து விட்டு ராணுவ ஆட்சி திடீரென பிரகடனம் செய்யப்பட்டது. அதிபர் மாளிகை, நாடாளுமன்றம் மீது துருக்கி ராணுவத்தின் ஒரு பிரிவினர் சரமாரி தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதல்களுக்கு துருக்கி போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இம்மோதலில் 17 போலீசார் உட்பட 60 பேர் பலியாகினர். இதனிடையே ராணுவப் புரட்சியை முறியடித்துவிட்டதாகவும் அரசாங்கம் தங்களது கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதே கருத்தை அதிபர் எர்டோகனும் கூறி வருகிறார். துருக்கி ராணுவத்தின் ஒரு பிரிவினர் எர்டோகனுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்திய ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. மேலும் இதுவரை அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டதாக 754 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு எர்ஜின்கான் மாகாணத்தின் ராணுவ தளபதி எக்ரெம் காக்லரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் புரட்சியில் ஈடுபட்ட 200 பேர் போலீசிடம் சரணடைந்து வருகின்றனர். துருக்கியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

No comments:
Post a Comment