Latest News

காஷ்மீரில் தொடர் பதற்றம்: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு - அமர்நாத் யாத்திரை 3வது நாளாக நிறுத்தம்


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நீடித்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மூன்றாவது நாளாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 தலைவர்களை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் சுட்டுக் கொலை செய்தனர். ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி பர்ஹான் வானி கொல்லப்பட்டதால் காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் மாநிலத்தில் சனிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்த பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்து இருந்தன.முழுஅடைப்பின் போது மாநிலத்தில் பல நகரங்களில் பர்கான் வானியின் ஆதரவாளர்கள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது வன்முறை ஏற்பட்டது. அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதில் காஷ்மீரில்,பதற்றம் உருவாகி உள்ளது. தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்துக்கு தீ வைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர். அனந்தநாக் மாவட்டத்தில் பண்டிபோரா, குவாசிகுந்த், லார்னு ஆகிய இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன. இந்த வன்முறையில் 23 பேர் பலியாகினர் 96 பாதுகாப்புப்படை வீரர்கள் உட்பட 200 பேர் காயமடைந்தனர். அங்கு பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில், அங்குள்ள டிரால் நகரில் வானியின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு படையினரின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி மாற்று வழியில் வந்து பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

3வது நாளாக இன்றும் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தெற்கு காஷ்மீரில் வெள்ளிக்கிழமை முதல் மொபைல் போன் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வன்முறையில் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க கடும் கட்டுப்பாடுகள் இன்றும் அமலில் உள்ளன. அரசுப்பேருந்துகள் இயக்கம் முற்றிலும் முடங்கியது. சில தனியார் பேருந்துகளும் ஆட்டோ ரிக்சாக்களும் சில இடங்களில் செல்வதை காண முடிந்தது. சையது அலி ஷா கிலானி, மிர்வாய் உமர் பரூக், முகம்மது யாசின் மாலிக் உள்ளிட்ட பிரிவினைவாத தலைவர்கள் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர்மட்டக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சரின் வீட்டில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய உள்துறை செயலாளர், ஐ.பி., தலைவர், காஷ்மீர் மாநிலச் செயலாளர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். ஸ்ரீ நகர் உள்ளிட்ட சில பகுதியில் இன்றும் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு அடிவாரத்தில் உள்ள பால்டால் மற்றும் பஹல்காம் ஆகிய முகாம்களில் இருந்து செல்லும் அமர்நாத் புனித யாத்திரையை 3வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உண்ண உணவு, குடிநீர் இன்றி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், விரைவில் யாத்திரையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.